Rowdy Anjalai Arrest : சேலை வியாபாரியா? ஆம்ஸ்ட்ராங் கொலைகாரியா? யார் இந்த அஞ்சலை?
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்பு இருப்பதாக தேடப்பட்டு வந்த முன்னாள் பாஜக நிர்வாகி அஞ்சலை ஓட்டேரி பகுதியில் பதுங்கியிருந்த போது காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.. தற்போது அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.. இந்நிலையில் யார் இந்த அஞ்சலை, சிக்கியது எப்படி என்பதை காணலாம்..
புலியந்தோப்பு அஞ்சலை என்று சொன்னால் வடசென்னையில் அவரை தெரியாதவர்களே இருக்க முடியாது. அந்த அளவு அந்த பகுதியில் நீண்ட காலமாக தாதாவாக இருந்து வருபவர் தான் இவர். தொடக்க காலத்தில் தன்னுடைய கணவன் விட்டு சென்றதால், ஆதரவின்றி சேலை வியாபாரம் செய்து வந்தவருக்கு, ஆற்காடு சுரேஷின் நட்பு கிடைத்துள்ளது. நாளடைவில் கந்துவட்டி, கட்டபஞ்சாயத்து, கஞ்சா விற்பனை என இவருடைய க்ரைம் ரேட் ஏறிக்கொண்டே சென்றுள்ளது.. இந்நிலையில் ஒரு கட்டத்தில் ஆர்காடு சுரேஷும், அஞ்சலையும் நெருங்கி பழகி வந்ததாகவும், இருவரும் சேர்ந்தே பல்வேறு குற்ற செயல்களில் ஈடுப்பட்டதாக சொல்லபடுகிறது..
இந்நிலையில் தான் ஆர்காடு சுரேஷின் கொலைக்கு பழித்தீர்க்க, ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு அஞ்சலை உதவியிருப்பதாக காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்த ரவுடி கும்பலுக்கு லட்சகணக்கில் பணம் கொடுத்து உதவியதற்கான ஆதாரங்கள் காவல்துறையின் விசாரணையில் கிடைத்துள்ளது.
இந்த நிலையில் இந்த வழக்கில் பாஜக வடசென்னை மேற்கு மாவட்ட துணைத் தலைவராக அஞ்சலைக்கு தொடர்பு இருப்பதாகவும், அவரை தேடி வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து அவரை அனைத்து பொறுப்புகளிலிருந்தும் பாஜக நீக்கியிருப்பதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வருவதை அறிந்து தலைமறைவாக இருந்த அஞ்சலை கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை ஓட்டேரி அருகே தன்னுடைய நண்பர் வீட்டில் பதுங்கியிருந்த அவரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சொல்லபடுகிறது.