Nagarjuna convention demolition | தரைமட்டமான மண்டபம்! சோகத்தில் நாகர்ஜூனா! நடந்தது என்ன?
ஏரியை ஆக்கிரமித்துள்ளதாக குற்றம்சாட்டப் பட்டு நடிகர் நாகர்ஜூனாவுக்கு சொந்தமாக ஹைதராபாத்தில் இருந்த மண்டபம் இடிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
முன்னணி தெலுங்கு நடிகர்களில் ஒருவர் நடிகர் நாகர்ஜூனா. இவர் தெலங்கானா மாநிலத்தின் தலைநகரான ஹைதராபாதில் என் கன்வின்சன் என்கிற கட்டிடம் ஒன்றை சொந்தமாக நடத்தி வந்தார். இந்த கட்டிடம் அதி நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய மூன்று பெரிய மண்டபடங்களை கொண்டது. இந்த மூன்று மண்டபங்களுக்கான பார்க்கிங் வசதிகளும் உள்ளன. பல்வேறு திருமண நிகழ்ச்சிகள், அரசியல் நிகழ்வுகள் மற்றும் சினிமா நிகழ்ச்சிகள் இந்த கட்டிடத்தில் நடைபெற்று வந்தன.
தற்போது இந்த கட்டிடத்தை அதிகாரிகள் இடித்துள்ள நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாதில் உள்ள மாதம்பூர் என்கிற பகுதியில் தம்மிடி குந்தா என்கிற ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு சொந்தமான 3.5 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து நாகருஜூனா இந்த கட்டிடத்தை கட்டியுள்ளதாக புகார் எழுந்தது. இந்த கட்டிடத்தை இடித்து ஏரியை மறுசீரமைக்க கோரி ஹைதராபாத் மாநகராட்சியில் பலர் புகாரளித்திருந்தார்கள். இந்த மனுவை விசாரித்த மாநகராட்சி அதிகாரிகள் நாகர்ஜூனாவுக்கு சொந்தமான கட்டிடத்தை இடிக்க முடிவு செய்தார்கள். இன்று ஆகஸ்ட் 24 ஆம் தேதி காவல் துறையின் பலத்த பாதுகாப்போடு இயந்திர வாகணங்களைக் கொண்டு இந்த கட்டிடம் இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டது. மேலும் இந்த பகுதி வழியாக செல்லும் சாலைகளும் மூடப்பட்டன.
சமீபத்தில் தொடங்கப்பட்ட ஹைதராபாத் பேரிடர் மீட்பு மற்றும் இயற்கை அரண்கள் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு முகமை இந்த இடிக்கும் பணிகளை மேற்கொண்டு , சமீபத்தில் அமைக்கப்பட்ட இந்த முகமை தனது முதற்கட்ட பணியாக நாகர்ஜூனாவின் கட்டிடத்தை இடித்துள்ளது தெலுங்கு திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தனது கட்டிடம் இடிக்கப்பட்டது தொடர்பாக நடிகர் நாகர்ஜூனா தனது எக்ஸ் தளத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார். அந்த பதிவில் “ என்னுடைய கட்டிடம் முழுக்க முழுக்க எனக்கு சொந்தமான நிலத்தில் கட்டப்பட்டது. எந்த வித அறிவிப்பும் இல்லாமல் அது இடிக்கப்பட்டது வருத்தமளிக்கிறது. இந்த கட்டிடம் ஒரு அங்குலம் கூட ஆக்கிரமிக்கப்பட்ட நிலம் இல்லை. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கும் நடைபெற்று வருகிறது . ஆக்கிரமிப்பு நிலத்தில் இந்த கட்டிடம் இருப்பதாக நீதிமன்றம் கூறியிருந்தால் நானே முன் நின்று அதை இடித்திருப்பேன். இது தொடர்பாக நீதி மன்றத்தில் தக்க இழப்பீடு கோருவேன் “ என்று அவர் தெரிவித்துள்ளார் .