Shiva Rajkumar | எங்க அண்ணன்டா கமல் கொந்தளித்த நடிகர் சிவராஜ் குமார்! கன்னட வெறியர்களுக்கு பதிலடி

கன்னட மொழி தமிழில் இருந்து தான் பிறந்தது என்று நடிகர் கமல் சொன்னதற்கு கர்நாடகாவில் எதிர்ப்பு கிளம்பிய  நிலையில்,  கமலுக்கு ஆதரவாக களத்தில் இறங்கியுள்ளார் கன்னட நடிகர் சிவராஜ்குமார்.

கமல்ஹாசன் நடித்து தயாரித்து, மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள தக் லைஃப் திரைப்படம் வரும் ஜுன் 5ம் தேதி வெளியாக உள்ளது. இதை முன்னிட்டு படக்குழு தீவிர புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ளன. அந்த வகையில் கமல்ஹாசன் அடங்கிய குழுவினர் பெங்களூருவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றனர். 

அந்த நிகழ்ச்சியில் பேசிய கமல், “உயிரே, உறவே, தமிழே.. இந்த இடத்தில் இது தான் என்னுடைய குடும்பம். அதன் காரணமாகவே சிவராஜ்குமார் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். அதன் காரணமாகவே எனது பேச்சை உயிரே, உறவே, தமிழே என தொடங்கினேன். உங்கள் மொழியான கன்னடமும் தமிழில் இருந்து தான் பிறந்தது. எனவே நீங்களும் எனது குடும்பத்தின் ஒரு அங்கம் தான்” என்று பேசினார். 

கன்னட மொழி தமிழில் இருந்து தான் பிறந்தது என்று கமல் சொன்னதற்கு கன்னட அமைப்புகள், அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர். மேலும், கமல் வரலாறு தெரியாமல் பேசுகிறார் அவர் தன்னுடைய கருத்தை திரும்ப பெறவேண்டும் இல்லை என்றால் தக் லைஃப் திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிட விடமாட்டோம் என்று போர்க்கொடி தூக்கி வருகின்றனர். 

இந்த நிலையில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் கமலுக்கு ஆதராவாக களத்தில் இறங்கியுள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில், ”கமல் சார் எப்போதும் கன்னடத்தைப் பற்றி உயர்வாகப் பேசுவார், பெங்களூருவைப் பற்றி மிகுந்த அபிமானத்தை வெளிப்படுத்துவார். அவர் எங்கள் நகரத்தைப் பற்றி பெருமையுடன் பேசுகிறார். நாங்கள் அவரைப் பார்த்து வளர்ந்தவர்கள், நான் பல வருடங்களாக கமல் சாரின் தீவிர ரசிகன்.

சிலர் என்னிடம் ‘உங்களை எப்படி கமல்ஹாசனின் ரசிகன் என்று சொல்லிக் கொள்ள முடியும், அவர் ஒன்றும் உங்கள் தந்தை அல்ல’என்று கேட்பார்கள். அப்பா என்பவர் எனது குடும்பைத்தைச் சேர்ந்த ஒருவர். ஆனால் கமல் சார் வித்தியாசமானவர். அவர் ஒரு நட்சத்திரம் மட்டுமல்ல - அவர் எனக்கு ஒரு உண்மையான உத்வேகமாக இருந்தார். உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பிடித்த நடிகர் இருக்கலாம், எனக்கு, அது எப்போதும் கமல் சார் தான். பார்வையாளர்களுக்கு என்ன தேவை என்பதை அவர் சரியாகப் புரிந்துகொள்கிறார். கன்னடம் மீது அன்பை வெளிப்படுத்துபவர்கள் ஒரு சில குறிப்பிட்ட விஷயங்களில் மட்டுமின்றி அனைத்து விசயங்களிலும் அதை வெளிப்படுத்த வேண்டும். கன்னட மொழி மீதான நமது அர்ப்பணிப்பு வாழ்நாள் முழுவதும் இருக்க வேண்டும். தேவைப்பட்டால், கன்னடத்திற்காகப் போராட  என் உயிரைக் கூடக் கொடுக்க நான் தயாராக இருக்கிறேன். கேமராக்கள் முன் கன்னடத்தைப் பற்றிப் புகழ்ந்து பேசுவது போதாது. வார்த்தைகளை விட செயல்கள் முக்கியம்.

கன்னட சினிமாவுக்கு நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள்? புதியவர்களுக்கு வாய்ப்புகளை வழங்கியுள்ளீர்களா? கன்னடம் வளர வேண்டும் என்று நாம் உண்மையிலேயே விரும்பினால், அதை எல்லா வழிகளிலும் ஆதரிப்பது நமது கடமை. நான் ஏன் இதைச் சொல்கிறேன் என்று தயவுசெய்து தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள். உங்கள் மனசாட்சியைக் கேளுங்கள் - நான் சொல்வது சரியா அல்லது தவறா?” என்று கேள்வியெழுப்பியுள்ளார்.  சிவராஜ் குமாரின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola