Puducherry News | ”திருநங்கைனா கேவலமா” CM-யிடம் நேருக்கு நேர் வாக்குவாதம் பதறிப் போன அதிகாரிகள்
புதுச்சேரி அரசு சார்பில் நடத்தப்பட்ட மாரத்தான் போட்டியில் முதலிடம் பிடித்த திருநங்கை மாணவிக்கு பாலினத்தை காரணம் காட்டி பரிசு வழங்காமல் புறக்கணித்த விளையாட்டு துறையை கண்டித்து, தேசிய விளையாட்டு தினவிழாவில் திருநங்கைகள் முதலமைச்சர் ரங்கசாமியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் முதலமைச்சர் ரங்கசாமி வழங்கிய சிறப்பு பரிசை திருநங்கை மாணவி வாங்க மறுத்ததால் அதிகாரிகள் அவரை வலுக்கட்டாயமாக விழா மேடையில் இருந்து இறக்கிவிட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை சார்பில் தேசிய விளையாட்டு தினவிழா மற்றும் கேலோ புதுச்சேரி திருவிழா பரிசளிப்பு விழா கருவடிக்குப்பத்தில் உள்ள காமராஜர் மணி மண்டபத்தில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம் உள்ளிட்டோர் கலந்தகொண்டு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.
இதனிடையே புதுச்சேரி அரசின் விளையாட்டு துறை சார்பில் கடந்த வாரம் 5 கி.மீ தூரத்திற்கு மாரத்தான் போட்டி நடத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் பிரிவில் லாஸ்பேட்டை அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளியில் முதலாம் ஆண்டு ஆசிரியர் பயிற்சி படித்து வரும், கிருமாம்பாக்கம் பகுதியை சேர்ந்த தியா என்ற திருங்கை மாணவி பங்கேற்றுள்ளார். பெண்கள் பிரிவில் பங்கேற்ற இவர் முதலிடம் பிடித்துள்ளார். ஆனால் பரிசளிப்பு விழாவில் தியாவுக்கு பரிசு வழங்கப்படவில்லை. இதனை கண்டித்து திருநங்கை தியா விழா மேடையில் முதல்வர் அளித்த சிறப்பு பரிசை வாங்க மறுத்து முதலமைச்சரிடம் முறையிட்டார்.
அப்போது அதிகாரிகள் திருநங்கை மாணவியை விழா மேடையில் இருந்து வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர். இதனால் அதிர்ச்சியடைந்த திருநங்கை மாணவி தியா மற்றும் சக திருநங்கைகள் பரிசளிப்பு விழா முடிந்து வெளியே வந்த, முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் அமைச்சரை முற்றுகையிட்டு முதலிடம் பிடித்த திருநங்கை தியாவுக்கு பாலினத்தை காரணம்காட்டி முதலிடம் பிடித்ததற்கான பரிசு வழங்காமல், சிறப்பு பரிசு மட்டும் வழங்கப்பட்டதாக புகார் தெரிவித்தனர். அப்போது இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக முதலமைச்சர் ரங்கசாமி உறுதியளித்தார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.