Priyanka Mohan : மொத்தமாக சரிந்த மேடை! விழுந்த பிரியங்கா மோகன்! ஷாக்கான ரசிகர்கள்

தெலங்கானாவில் நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் பிரியங்கா மோகன் மேடையில் நின்று கொண்டிருந்த போது திடீரென மேடை சரிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார் பிரியங்கா மோகன். தற்போது எம் ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள பிரதர் படத்தில் நாயகியாக நடித்துள்ளார். இப்படத்தின் ப்ரோமோஷனில் பிஸியாக இருக்கும் அவர்  தெலங்கானாவின் மால் திறப்பு விழா நிகழ்ச்சி ஒன்றில்  கலந்துகொண்டார். இவரோடு சேர்த்து காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர் ஜான்சி ரெட்டியும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். 

இந்தநிலையில் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த நேரத்தில் மேடை திடீரென   சரிந்ததால் பிரியங்கா மோகன் உட்பட மேடையில் இருந்தவர்கள் அனைவரும்  கீழே விழுந்தனர். எதிர்பாராத இந்த விபத்தில் ஒரு சிலருக்கு பலத்த காயங்களும் பிரியங்கா மோகனுக்கு  லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஒரு சில நபர்கள் மட்டுமே நிற்கும் வகையில் அமைக்கப் பட்டிருந்த இந்த மேடையில் அதிக ஆட்கள் நின்றது மேடை சரிந்ததற்கான காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. மேடை சரிந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் நடிகையின் நிலைமை பற்றி ரசிகர்கள் விசாரித்தனர். 

இந்நிலையில் தான் நலமாக இருப்பதாகவும். லேசான காயங்கள் மட்டும் ஏற்பட்டிருப்பதாக பிரியங்கா மோகன் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். காங்கிரஸை சேர்ந்த ஜான்சி ரெட்டிக்கும் மட்டும் அதிக காயங்கள் ஏற்பட்டதால் அக்கட்சியினர் உடனடியாக மருத்துமனைக்கு அழைத்து சென்றனர்.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola