Ilayaraja copyright case | ”உங்களுக்கு உரிமை இல்ல” இளையராஜாவுக்கு தடை! கறார் காட்டிய நீதிமன்றம்

134 பட பாடல்களை பயன்படுத்தவோ உரிமை கோரவோ கூடாது என இளையராஜாவுக்கு ஆர்டர் போட்டுள்ளது டெல்லி உயர்நீதிமன்றம்.

இளையராஜாவை சுற்றி காப்புரிமை பஞ்சாயத்து தொடர்ந்து வலம் வந்து கொண்டிருக்கிறது. இளையராஜாவின் பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்துவதாக சொல்லி சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனங்களுக்கு நோட்டீஸும் அனுப்பப்பட்டு வருகிறது. பதிப்புரிமை சட்டப்படி பாடலை உருவாக்கியவர் அந்தப் பாடலுக்கு முழு உரிமையாளர் என்பதால் முறையாக அனுமதியைப் பெற்று பாடலைப் பயன்படுத்தியிருக்க வேண்டும் என நோட்டீஸில் குறிப்பிடப்பட்டது.

இந்தநிலையில் 1976 முதல் 2001 வரையிலான காலகட்டத்தில் இளையராஜா இசையமைத்த சுமார் 134 திரைப்படங்களின் இசை மற்றும் ஒலிப்பதிவு உரிமைகள் தங்களுக்கே சொந்தம் எனச் சரிகம நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்திற்கு சென்றது. சம்பந்தப்பட்ட பட தயாரிப்பாளர்களுடன் ஒப்பந்தம் போட்டு தான் காப்புரிமையை வாங்கியுள்ளதாகவும் அந்த பாடல்களுக்கு இளையராஜா சொந்தக் கொண்டாடக் கூடாது என்றும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் இந்தப் பாடல்கள் இளையராஜாவுக்கு சொந்தமானவை என்றும், அவரின் அனுமதி இல்லாமல் டிஜிட்டல் தளங்களில் பாடல்களை வெளியிடக் கூடாது என இளையராஜா தரப்பில் வாதிடப்பட்டது. காப்புரிமை சட்டத்தின் படி படத்தின் உரிமையாளரிடம் ஒப்பந்தம் போட்டு பாடல்களை பயன்படுத்திக் கொள்வது சட்டவிரோதமானது கிடையாது என சரிகம நிறுவனம் தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட டெல்லி உயர்நீதிமன்றம் சரிகம நிறுவனத்திடம் உள்ள 134 பட பாடல்களை இளையராஜா பயன்படுத்தவோ உரிமை கோரவோ கூடாது என தடை விதித்துள்ளது. அதேபோல் இந்த பாடல்களுக்கான உரிமத்தை வேறு யாருக்கும் வழங்கவும் இளையராஜாவுக்கு அனுமதி கிடையாது என கறாராக தெரிவித்துள்ளது. இந்த தடையை விதிக்கவில்லை என்றால் சரிகம நிறுவனத்திற்கு பெரிய அளவில் இழப்பு ஏற்படும் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola