ஷங்கருக்கு மருமகனான ரோஹித் யார் இவர்?

Continues below advertisement

இந்தியன், அந்நியன், எந்திரன் போன்ற பல ஹிட் படங்களை கொடுத்த தமிழ் திரையுலகின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் வீட்டில் ஒரு பிரமாண்ட நிகழ்வு அரங்கேறி உள்ளது. ஷங்கர் – ஈஸ்வரி தம்பதியருக்கு இரு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். அவர்களது மூத்த மகள் ஐஸ்வர்யா – புதுச்சேரி கிரிக்கெட் வீரர் ரோஹித்தின் திருமணம்தான் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு ரெசார்டில் நேற்று நடந்தது. ஷங்கர் வீட்டில் நடந்த இந்த டும்-டும்-டும் நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின், சுகாராத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன், நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். கொரோனா பரவல் காரணமாக மணமக்களுக்கு நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் மட்டுமே திருமணத்தில் கலந்து கொண்டனர். ஊரடங்கு கட்டுப்பாடுகள் இல்லாமல் இயல்பு நிலைக்கு திரும்பியவுடன், ஷங்கர் பட பாணியில் கோலாகலமாக பிரமாண்ட முறையில் திருமண வரவேற்பு நடத்தப்படும் என மணமக்கள் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மருத்துவரான ஐஸ்வர்யா, கிரிக்கெட் வீரர் ரோஹித் தாமோதரனை கரம் பிடித்துள்ளார். தொழிலதிபர், தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் மதுரை பாந்தர்ஸ் அணி உரிமையாளருமான தாமோதரின் மகன்தான் ரோஹித். 29 வயதான ரோஹித், ஒரு ’Professional’ கிரிக்கெட் வீரர். இவர் ஒரு பேட்டிங் ஆல்-ரவுண்டர். கடந்த 2012-ம் ஆண்டு லிஸ்ட் ‘ஏ’ கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து புதுச்சேரி அணியில் இடம்பிடித்தார். மெல்ல மெல்ல கிரிக்கெட் கரியரில் அடுத்தக்கட்டத்தை எட்டிய ரோஹித், தற்போது புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனாக உள்ளார். 2016-ம் ஆண்டு முதல் தமிழ்நாடு அளவில் நடைபெற்று வரும் தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் ரோஹித் விளையாடி வருகிறார். 2018-ம் ஆண்டு நடைபெற்ற டிஎன்பிஎல் தொடரில், மதுரை பாந்தர்ஸ் அணியின் கேப்டனாக அணியை வழிநடத்தினார் ரோஹித். அந்த சீசனில், அணியை இறுதிப்போட்டி வரை அழைத்து சென்றார். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில், திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை எதிர்கொண்ட மதுரை பாந்தர்ஸ், போட்டியை வென்று தொடரை கைப்பற்றியது. டிஎன்பிஎல் வரலாற்றில், மதுரை அணியின் முதல் கோப்பையை வெல்ல வழிவகுத்தார் கேப்டன் ரோஹித் 2018-ம் ஆண்டு முதல் ரஞ்சி மற்றும் விஜய் ஹசாரே கோப்பை போன்ற டொமெஸ்டிக் கிரிக்கெட்டில் விளையாட புதுச்சேரி அணி புதிதாக சேர்க்கப்பட்டது. இப்போது புதுச்சேரி அணியின் கேப்டனாக தனது கிரிக்கெட் இன்னிங்ஸை விளையாடி வரும் ரோஹித், அடுத்தாக திருமண இன்னிங்ஸையும் தொடங்கியுள்ளார். வாழ்த்துகள் கேப்டன்!

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram