
AR Rahman : ”முன்னாள் மனைவினு சொல்லாதீங்க” ஆடியோ வெளியிட்ட சாய்ராபானு! இணையும் ரஹ்மான் தம்பதி?
ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் சாய்ரா பானு ஒருவரை ஒருவர் பிரிந்து வாழ்வதாக கடந்த ஆண்டு அறிவித்த நிலையில், ஏ. ஆர்,ரஹ்மானுக்கு நேற்று தீடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டத்தை தொடர்ந்து,” தன்னை யாரும் ஏஆர் ரஹ்மானின் முன்னாள் மனைவி என்று சொல்ல வேண்டாம்” என்று உணர்ச்சி பொங்க கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவின் இசைப்புயல் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் ஏ.ஆர்.ரஹ்மான். இவர் கடந்த 1995 ம் ஆண்டு சாய்ரா பானு என்பவரை திருமணம் செய்து கொண்டார். மகிழ்ச்சியுடன் வாழ்ந்த இந்த தம்பதியினர் கடந்த ஆண்டு ஒருவரை ஒருவர் பிரிவதாக அறிவித்தனர். இது தொடர்பாக சாய்ரா பானு,”இருவருக்கும் இடையே தீர்க்க முடியாத இடைவெளி உருவானதால் வேறு வழியின்று ஏ.ஆர்.ரஹ்மானை பிரிகிறேன்”என்றார்.
ஏ.ஆர்.ரஹ்மானோ,”தங்களது திருமண பந்தம் 30 ஆண்டுகளை எட்டும் என நம்பி இருந்தோம். ஆனால் எல்லாமே கண்ணுக்குத் தெரியாத முடிவாக சென்று விட்டது”என்று கூறியிருந்தார். இதனிடையே இவர்களது விவாகரத்து செய்தி வெளியான போது ரஹ்மானின் இசைக்குழுவில் இருக்கும் மோகினி டே என்பவரும் தனது கணவரை பிரிவதாக அறிவித்தார். கோலிவுட்டில் இந்த விவகாரம் தான் அப்போது கிசுகிசுக்கப்பட்டது.
இந்த நிலையில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு திடீரென்று நேற்று உடல் நலக்குறைவு ஏற்ப்பட்டது.”நீரிழப்பு காரணமா டிரிப்ஸ் ஏத்தினாங்க. இப்போ பரவாயில்ல. டிரவல்னால அவருக்கு டயர்ட் அவ்ளோ தான்” என்று அவரது அவரது சகோதரி கூறியிருந்தார். இச்சூழலில் தான் தன்னை யாரும் ஏஆர் ரஹ்மானின் முன்னாள் மனைவி என்று சொல்ல வேண்டாம்”என்று உணர்ச்சி பொங்க கூறியுள்ளார் சாய்ரா பானு. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஆடியோ பதிவில், ”அல்லாஹ்வின் அருளால் அவர் இப்போது நலமாக இருக்கிறார். நாங்கள் அதிகாரப்பூர்வமாக விவாகரத்து பெறவில்லை, நாங்கள் இன்னும் கணவன் மனைவிதான் என்பதை நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்.
கடந்த இரண்டு வருடங்களாக எனக்கு உடல்நிலை சரியில்லை, நான் அவரை மன அழுத்தத்திற்கு ஆளாக்க விரும்பவில்லை என்பதால் நாங்கள் பிரிந்திருக்கிறோம்.ஆனால், தயவுசெய்து, அனைத்து ஊடகவியலாளர்களும் என்னை அவரது முன்னாள் மனைவி என்று அழைக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்... நாங்கள் இப்போது பிரிந்துவிட்டோம், ஆனால், எனது பிரார்த்தனைகள் எப்போதும் அவருடன் உள்ளன. அனைவருக்கும், குறிப்பாக அவரது குடும்பத்தினருக்கு, அவருக்கு மன அழுத்தத்தை கொடுக்க வேண்டாம் என்றும், அவரை கவனித்துக் கொள்ளுங்கள் என்றும் நான் கூற விரும்புகிறேன்”என்று கூறியுள்ளார் சாய்ரா பானு. இதனைத் தொடர்ந்து இருவரும் ஒன்று சேர்ந்தால் மகிழ்ச்சி தான் என்று ரசிகர்கள் கூறியுள்ளனர்.