Allu Arjun Vs Revanth Reddy : ”வெறும் சினிமாக்காரன்..நாட்டுக்கா போராடுனாரு?”ரேவந்த் vs அல்லு அர்ஜுன்!
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனின் கைது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த கைது நடவடிக்கை தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி மற்றும் அல்லு அர்ஜுன் இடையேயான முன்விரோதம் காரணமாக அரங்கேறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் அல்லு அர்ஜுன் என்ன நாட்டுக்காக பார்டரில் நின்று சண்டை போட்டாரா வெறும் நடிகர் தானே என ரேவந்த் பேசிய வீடியோ வைரலாகி பரபரப்பை கூட்டியுள்ளது.
அல்லு அர்ஜுன் நடிப்பு மற்றும் தயாரிப்பில் சமீபத்தில் வெளியான புஷ்பா 2 திரைப்படத்தை பார்க்க சென்ற ரசிகை ஒருவர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். இதற்கு காரணம் அல்லு அர்ஜூன் முன்னறிவிப்பின்றி அதே திரையரங்கிற்கு படம் பார்க்க வந்ததாகவும் அதனால் ரசிகர்கள் கூட்டம் நிரம்பியதால் இந்த அசம்பாவிதம் நடந்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்து புகார் வரை சென்றது. இந்த புகாரின் அடிப்படையில் அல்லு அர்ஜுன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் நேற்று கைது செய்யப்பட்டார்.
ஓரிரவு அவர் சிறையில் கழித்த பின்னர் இன்று காலை ஜாமீனில் வெளியே வந்தார். ஆனால் அல்லு அர்ஜுனின் கைது பல்வேறு தரப்பினரின் கண்டனங்களை பெற்று வருவதோடு, அப்பகுதியில் போராட்டங்களையும் வெடிக்க செய்த்து.
இந்நிலையில் இந்த கைது நடவடிக்கை தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியின் பழி வாங்கும் செயல் என விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இதையடுத்து நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ரேவந்த் ரெட்டியிடம் அல்லு அர்ஜுன் கைது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.. அதாவது நமது அரசியல் சூப்பர் ஸ்டார் நமது திரைப்பட சூப்பர் ஸ்டாரை கைது செய்துவிட்டாரே என மக்கள் கோபத்தில் உள்ளனர் என தொகுப்பாளர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த ரேவந்த் ரெட்டி, “ஒருவரை ஜெயிலுக்கு அனுப்பியது குறித்து இவ்வளவு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது. ஆனால், ஒரு பெண் தன் உயிரை இழந்து இருக்கிறார். அவரைக்குறித்து நீங்கள் ஒரு துளியும் கவலைப்படவில்லை. அந்தப் பெண்ணின், குடும்பம் எப்படி இருக்கிறது.. அந்த ஏழை பெண்ணின் குடும்பத்தினரின் வாழ்க்கை என்ன ஆனது? என்று எதுவும் கேட்கவில்லை. அந்தப் பெண்ணின் குழந்தை 11 நாட்களாக கோமாவில் இருக்கிறான். அவன் மீண்டு வந்து அம்மா எங்கே என்று கேட்டால் அம்மா இல்லை என்று எப்படி சொல்ல முடியும்? இது குறித்தெல்லாம் நீங்கள் ஒரு கேள்வி கூட கேட்கவில்லை. சினிமாவில் நடிப்பது அவர் வேலை, அதன்மூலம் பணம் குறைவாக வரப்போகிறது அல்லது அதிகமாக வரப்போகிறது. இதில் உங்களுக்கும் எனக்கும் என்ன கொடுக்கல் வாங்கல் இருக்கிறது. அவர் என்ன நாட்டுக்காக பார்டரில் நின்று சண்டை போட்டாரா படம் தயாரிக்கிறார் பணம் சம்பாதிக்கிறார் அவ்வளவுதான் என காட்டமாக தெரிவித்திருந்தார் ரேவந்த் ரெட்டி.
இப்படி பொதுவெளியில் ஒரு பிரபல நடிகர் குறித்து முதல்வர் காட்டமான கருத்துகளை வெளியிட என்ன காரணம் என்று பார்க்கையில், இவர்கள் இருவருக்கு ஏற்கனவே சில மனக்கசப்புகள் இருந்து வருவதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் புஷ்பா 2 திரைப்பட ரிலீஸுக்கு முன்பு அத்திரைப்பட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அல்லு அர்ஜுன், சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி வழங்கி திரைத்துறையினருக்கு ஆதரவாக நிற்கும் அரசுக்கும், முதலமைச்சருக்கும் நன்றி என தெரிவித்ததோடு, முதல்வரின் பெயரை மறந்தது போல் மேடையிலேயே நகைத்தார். இச்சம்பவம் இவர்களுக்குள் ஏதோ இருக்குமோ என்ற சந்தேகத்தை உருவாக்கியது.
மேலும் கடந்த சில நாட்களாக அல்லு அர்ஜுன் அரசியலுக்கு வர உள்ளதாகவும் அதுகுறித்து ஆலோசிக்க அவர் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரை டெல்லியில் சந்தித்ததாகவும் வதந்திகள் வெளியானது. ஆனால் அதனை மறுத்து அல்லு அர்ஜுன் அரசியலுக்கு வரவில்லை என அல்லு அர்ஜுன் டீம் தரப்பில் இருந்து அறிக்கை வெளியானது. இது ரேவந்த் ரெட்டியை மேலும் சூடேற்றியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இதன் பிறகே அல்லு அர்ஜுன் கைது அரங்கேறியதாக நெட்டிசன்கள் பேசி வருகின்றனர்.