Vikrant Massey: ”இனி நடிக்க மாட்டேன்” பிரபல நடிகர் பகீர் மிரட்டலுக்கு பயந்தாரா?
எங்கள் உயிருக்கு ஆபத்து இருக்கிறது..என் 9 மாத குழந்தையின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சினிமாவை விட்டு விலகுகிறேன் என்று 12th fail பட நடிகர் விக்ராந்த் மாஸ்ஸி சொல்லி இருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது.
பாலிவுட் நடிகர் விக்ராந்த் மாஸ்ஸி ரன்வீர் சிங், சோனாக்ஷி சின்ஹா நடிப்பில் கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான ‘lootera’ திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானார். மிகவும் பிரபலமான ’மிர்சாபூர்’ வெப் சீரிஸில் விக்ராந்த் மாஸ்ஸி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவரது நடிப்பில் வெளியான 12th fail திரைப்படம் இந்திய அளவில் வரவேற்பை பெற்று திரைத்துறையில் அவருக்கான திருப்புமுனையாக அமைந்தது.
சமீபத்தில் விக்ராந்த் மாஸ்ஸி, ராஷி கண்ணா உள்ளிட்டோர் நடித்த சபர்மதி ரிப்போர்ட் திரைப்படம் வெளியானது. இப்படத்திற்கு பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பாராட்டு தெரிவித்தனர். இந்நிலையில் விக்ராந்த் மாஸ்ஸி சினிமாவில் இருந்து விலகுவதாக தனது சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளார்.
அவரது பதிவில், “கடைசி சில ஆண்டுகள் எனது வாழ்வில் சிறப்பானதாக அமைந்தது. எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி. ஒரு கணவர், தந்தை, மற்றும் மகனாக எனது வீட்டை கவனிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. வரும் 2025ஆம் ஆண்டு கடைசியாக ஒரு முறை நாம் திரைப்படங்களில் சந்திப்போம். கடைசி 2 படங்கள் மற்றும் பல வருடங்களின் நினைவுகளுடன்” என கூறியுள்ளார்.
அவர் சினிமாவை விட்டு விலகுவது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. சபர்மதி ரிப்போர்ட் படத்தில் நடித்ததை வைத்து விக்ராந்த் மாஸ்ஸி ஒரு கலைஞராக இல்லாமல் இந்து மதம் சார்புடையவராக செயல்படுவதாக சிலர் விமர்சிக்க ஆரம்பித்தனர். இதனால் தான் அவர் சினிமாவை விட்டு விலகும் முடிவை எடுத்ததாக சொல்கின்றனர்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அவர், “சபர்மதி ரிப்போர்ட் திரைப்படத்தில் நடித்ததற்கு எனக்கு மிரட்டல்கள் வந்தன. இன்னும் பல மிரட்டல்கள் வர வாய்ப்பு இருக்கிறது. கலைஞர்களாக நாங்கள் அங்கு நடந்ததை சொல்லி இருக்கிறோம். எனக்கு 9 மாத குழந்தை இருக்கிறது. அந்த குழந்தையின் பாதுகாப்பை கருத்தில் கொள்ள வேண்டி உள்ளது. ”என்று கூறியுள்ளார்.
இதனை வைத்து மிரட்டல்கள் வந்ததால் தான் தனது குடும்பத்திற்காக அவர் சினிமாவை விட்டு விலகியிருக்கலாம் என பேசப்படுகிறது