தவெகவின் இளம் MLA அமைச்சராக சிவகாசி கீர்த்தனா இவர் யார் தெரியுமா? | TVK Young Minister Keerthana
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயின் அமைச்சரவையில் சிவகாசி எம்.எல்.ஏ. கீர்த்தனாவின் பெயரும் இடம்பெற்றுள்ளது.
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. தான் போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே அக்கட்சி 108 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைக்க உள்ளது. தவெக தலைவர் விஜய் முதலமைச்சராக பதவியேற்க உள்ள நிலையில் அக்கட்சியில் இளம் வயதினர் தொடங்கி மூத்த அரசியல்வாதிகள் வரை பலருக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. அப்படியாக விருதுநகர் மாவட்டம் சிவகாசி தொகுதியில் கீர்த்தனாவை வேட்பாளராக விஜய் நிறுத்தினார்.
இந்த தேர்தலில் அந்த மாவட்டத்தில் விஜய் பரப்புரை மேற்கொள்ள செல்லவில்லை. அக்கட்சியின் மூத்த நிர்வாகிகளும் பெரிய அளவில் பரப்புரை மேற்கொள்ளவில்லை. ஆனால் கீர்த்தனா தனது ஆதரவாளர்களுடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு தேர்தலில் மகத்தான வெற்றியை பெற்றுள்ளார். அதுவும் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை வீழ்த்தியது மிகப்பெரிய அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது. சிவகாசி தொகுதியின் 69 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் எம்.எல்.ஏ என்ற சிறப்பை கீர்த்தனா பெற்றிருக்கிறார். சமூக வலைத்தளப் பக்கத்தில் விருதை மகள் கீர்த்தனா என்ற பெயரில் பிரபலமாகவும் உள்ளார்.
மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரியில் கணிதத்தில் இளநிலைப் பட்டம் பெற்ற கீர்த்தனா, புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் புள்ளிவிவரத் துறையில் முதுநிலைப் பட்டம் பெற்றுள்ளார். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த அவர் அதனை ராஜினாமா செய்து விட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். இந்த தேர்தலில் கீர்த்தனா 68,709 வாக்குகள் பெற்று சுமார் 11,670 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் அசோகனை வீழ்த்தியுள்ளார். இந்த தொகுதியில் போட்டியிட்ட ராஜேந்திர பாலாஜி மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறார்.
இதனிடையே ஊடகங்களில் கீர்த்தனா தெலுங்கு மற்றும் இந்தி மொழியில் பேசியது மிகப்பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்தது. தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு எம்.எல்.ஏ., தமிழ் மொழியை பிரகடனப்படுத்தாமல் பிற மொழியில் பேசுகிறார் என்ற குற்றச்சாட்டை சமூக வலைத்தளங்களில் பலரும் முன்வைத்துள்ளனர்.
இந்த நிலையில் இதுகுறித்து பேசிய கீர்த்தனா, “நான் இந்தியில் பேசுகிறேன். எனது கட்சியின் பிரதிநிதித்துவத்தை இந்தியா முழுவதும், வெளிநாடுகளில் கூட பரப்ப விரும்புகிறேன். அதனால்தான் நான் இந்தியில் பேசுகிறேன். என் தலைவரைப் பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். என் கட்சியைப் பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். அரசியல் என்பது நீங்கள் பயப்பட வேண்டிய ஒன்றல்ல. அனைவரும் அரசியலுக்கு வர வேண்டும். நான் ஒரு உதாரணம் மட்டுமே; அனைவரும் வந்து அரசியலில் இணைய வேண்டும், அதுதான் நான் விரும்புகிறேன்” என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் கீர்த்தனாவுக்கு அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டுள்ளது. . விஜய் முதலமைச்சராக பதவியேற்கும் மேடையில் அமைச்சராக கீர்த்தனாவும் பதவியேற்கிறார்.