TN Local Body Election | உள்ளாட்சி தேர்தல் கேம் ஓவர்! ஸ்டாலினின் பழைய ப்ளான் குமுறலில் கவுன்சிலர்கள்
உள்ளாட்சி தேர்தலா? தற்போது வேண்டாம் தலைவரே என்று திமுக சீனியர்கள் சொல்லி வந்த நிலையில், இது தான் சரியான நேரம், உள்ளாட்சி அமைப்புகளை கலைத்துவிடலாம் என்று முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.. இப்படி ஸ்டாலின் நினைப்பதற்கு பின்னணியில் பக்கா பிளான் இருப்பதாக தெரிகிறது..
தமிழ்நாட்டை பொறுத்த அளவில் அதிமுக பெயரளவில் மட்டுமே எதிர்கட்சியாக இருப்பதால் ஆளும் திமுக அரசுக்கு கண்ணுக்கு எட்டிய வரை எதிரிகளே இல்லை என்ற நிலையே தமிழக அரசியலில் நீடிக்கிறது. அதனால் 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி நிச்சயம் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையோடு, மற்ற கட்சிகள் தேர்தல் குறித்து யோசிப்பதற்கு முன்பே தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டது திமுக.
வார்டு மறுவரையறை மற்றும் இடஒதுக்கீடு நடைமுறைகள் முடிந்த பிறகே உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி பதவிகளுக்கான காலவரையறை முடிய உள்ள நிலையில், தமிழக அரசு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
முன்னதாக எஸ்.சி. மற்றும் எஸ்.டி,. மகளிருக்கான வார்டுகளை முடிவு செய்த பிறகே உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை வெளியிட வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. முனியன் என்பவர் தொடர்ந்து இந்த வழக்கில் தான், வார்ட் வரையறை, இடஒதுக்கீடு நடைமுறைகள் உள்ளிட்ட பணிகள் முடியும் வரை உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகாது என தமிழ்நாடு அரசு உத்தரவாதம் அளித்துள்ளது. இதையேற்ற உயர்நீதிமன்றம், முனியன் என்பவர் தொடர்ந்த வழக்கை முடித்து வைத்துள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை ஊரகம், நகர்ப்புறம் என இரண்டு வகையான உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. ஊராட்சி ஒன்றிய தலைவர், துணைத் தலைவர், மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சித் தலைவர், வார்டு கவுன்சிலர்களை தேர்ந்தெடுக்க ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டில் முதற்கட்டமாக 27 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. வார்டு வரையறை பிரச்னை, எல்லை தீர்மானம் உள்ளிட்ட காரணமாக ஒன்பது மாவட்டங்களில் இரண்டாம் கட்டமாக 2021ம் ஆண்டில் தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில், 27 மாவட்டங்களைச் சேர்ந்த ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான பதவிக்காலம் வரும் ஜனவரி 5ம் தேதி முடிவடைய உள்ளது. அந்த பதவிகளுக்கான தேர்தல் எப்போது நடைபெறும் என எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில் தான், தான், வார்ட் வரையறை, இடஒதுக்கீடு நடைமுறைகள் உள்ளிட்ட பணிகள் முடியும் வரை உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகாது என தமிழ்நாடு அரசு உத்தரவாதம் அளித்துள்ளது.
ஏறக்குறைய 92 ஆயிரம் மக்கள் பிரதிநிதிகளின் பதவிக் காலம் ஜனவரி மாதம் ஐந்தாம் தேதியுடன் முடிவடைகிறது. ஆனால், திட்டமிட்டுள்ள பணிகள் அனைத்தும் நிறைவடைய வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. அதேநேரம், 2019ஆம் ஆண்டில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் இடைவெளி விட்டு நடத்தப்பட்டது. இதனால் இரு பகுதிகளாக தேர்தல் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே,காத்திருந்து உள்ளாட்சி தேர்தலை அனைத்து மாவட்டங்களிலும் ஒரே கட்டமாக நடத்தவும் தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.
எனவே கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் செயல்பட்டது போல ஊரக உள்ளாட்சி அமைப்புகளை கலைத்துவிட்டு தனி அதிகாரிகளில் நியமனம் செய்ய தமிழக அரசு திட்டமிட்டு இருக்கிறது. இதற்காக தமிழ்நாடு சட்டசபையில் மசோதா தாக்கல் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது. வரும் ஆறாம் தேதி கூடவுள்ள சட்டப்பேரவை, இதற்கான மசோதா தாக்கல் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. மாவட்ட ஊராட்சிகளை திட்ட அலுவலர் அல்லது கூடுதல் ஆட்சியர்களும், ஊராட்சி ஒன்றியங்களை வட்டார வளர்ச்சி அலுவலர்களும், ஊராட்சிகளை ஊராட்சி செயலர்களும் மேலாண்மை செய்யும் வகையில் இந்த அறிவிப்பு இருக்கும் என தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.