Edappadi Palanisamy : ’’நான் தான் கிங்’’எகிறி அடித்த எடப்பாடி சறுக்கிய அ.மலை!

தமிழ்நாடு, புதுச்சேரி சேர்த்து 40 தொகுதிகளிலும் வெற்றியை தட்டித்தூக்கி இந்தியா கூட்டணி சரித்திரம் படைத்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் இரண்டாவது இடம் யாருக்கு, அதிமுகவின் நிலை என்ன என்பது குறித்த பேச்சு ஆரம்பமாகியுள்ளது.

 

தமிழ்நாட்டில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி, நாம் தமிழர் என நான்குமுனை போட்டி நிலவியது. தமிழ்நாட்டில் திமுக, காங்கிரஸை உள்ளடக்கிய இந்தியா கூட்டணிக்கே அதிகம் வாய்ப்பு இருப்பதாக ஆரம்பம் முதலே கள நிலவரங்கள் இருந்தன. அதற்கு ஏற்ற மாதிரி அனைத்து தொகுதிகளிலும் அந்த கூட்டணியே வென்றுள்ளது. 

 

அதற்கு இரண்டாவது இடத்தில் எந்தக் கட்சி என்பதும் விவாதமாக மாறியது. வாக்கு சதவீதத்தை பொறுத்தவரை திமுக 26.93 சதவீதமும், அதிமுக 20.46 சதவீதமும் பாஜக 11.24 சதவீதமும், நாம் தமிழர் 8.19 சதவீதமும் பெற்றுள்ளன. அதிமுகவும், பாஜகவும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை என்றாலும் வாக்கு சதவீத்தை ஒப்பிடுகையில் பாஜகவை விட அதிமுக அதிகம் பெற்றுள்ளது.

 

ஆனால் சில தொகுதிகளில் அதிமுகவை பின்னுக்கு தள்ளி பாஜக மற்றும் கூட்டணி கட்சியினர் 2ம் இடத்தை பிடித்துள்ளனர். பாஜக மற்றும் கூட்டணியை பொறுத்தவரை திருவள்ளூரில் பாலகணபதி, தென் சென்னையில் தமிழிசை, மத்திய சென்னையில் வினோஜ் பி செல்வம், வேலூரில் ஏ.சி.சண்முகம், தருமபுரியில் சௌமியா அன்புமணி, நீலகிரியில் எல்.முருகன், கோவையில் அண்ணாமலை, மதுரையில் ராம சீனிவாசன், தேனியில் டிடிவி தினகரன், ராமநாதபுரத்தில் ஓபிஎஸ், நெல்லையில் நயினார் நாகேந்திரன், கன்னியாகுமரியில் பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் அதிமுக  வேட்பாளர்களை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளனர்.

 

சில தொகுதிகளில் அதிமுக 3வது இடத்திற்கு தள்ளப்பட்டாலும் 7 தொகுதிகளில் டெபாசிட் இழந்துள்ளது. தென் சென்னையில் ஜெயவர்தன், கன்னியாகுமரியில் பசலியான் நாசரேத், ராமநாதபுரத்தில் ஜெயபெருமாள், தேனியில் நாராயணசாமி, தூத்துக்குடியி சிவசாமி வேலுமணி, நெல்லையில் ஜான்சி ராணி, வேலூரில் பசுபதி ஆகியோர் டெபாசிட் இழந்துள்ளனர். 

 

அதோடு, கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுவிடம் ஆட்சியை பறிகொடுத்தாலும் கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளையும் கைப்பற்றியது அதிமுக. அதனால், கோவை மாவட்டம் தங்கள் கோட்டை என்று சொல்லிக்கொண்டிருந்தவர்கள் இந்த முறை அதனையும் கோட்டை விட்டிருக்கின்றனர். 

 

பாஜகவுடன் கூட்டணியை முறித்து அதிமுக தேர்தலை சந்தித்த நிலையில், பெரும்பாலான தொகுதிகளில் இரு கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி இருந்தது. இபிஎஸ் தலைமையிலான அதிமுக அடுத்தடுத்து தோல்விகளை சந்திப்பது விமர்சனத்திலும் சிக்கியுள்ளது.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola