Prashant Kishor : ”பிரசாந்த் கிஷோரை காணவில்லை! பாஜக 300 இடம் சொன்னீங்களே?” கலாய்க்கும் நெட்டிசன்ஸ்
பாஜக தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் என்று அடித்து பேசிய பிரசாந்த் கிஷோரை தற்போது எதிர்க்கட்சியினர் ரவுண்டு கட்டி வருகின்றனர். அவர் கணிப்புக்கு மாறாக தேர்தல் முடிவுகளில் ட்விஸ்ட் நடந்துள்ள நிலையில், பிரசாந்த் கிஷோரை காணவில்லை என சமூக வலைதளங்களில் தேட ஆரம்பித்துள்ளனர்.
மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாஜக 300க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று அசுர பலத்துடன் ஆட்சி அமைக்கும் என வெளிவந்த கருத்துக்கணிப்புக்கு மாறாக தேர்தல் முடிவுகள் வந்துள்ளன. 400 இடங்களிக்கு குறிவைத்த பாஜக தற்போது கூட்டணி கட்சிகளை நம்பி ஆட்சி அமைக்கும் சூழல் உருவாகியுள்ளது.
குறிப்பாக தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் பாஜகவுக்கு ஆதரவாக பல்வேறு கணிப்புகளை வெளியிட்டு வந்தார். பாஜக செய்திதொடர்பாளர் போல் பேசுவதாக பலரும் விமர்சனம் செய்தனர். பாஜக 300 தொகுதிகளுக்கும் மேல் கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என அடித்து சொன்னார் பிரசாந்த் கிஷோர். மற்றவர்கள் சொல்வது போல் வட மாநிலங்களிலும் பாஜகவின் வீழ்ச்சி இருக்காது என்று கூறியிருந்தார். ஆனால் பிரசாந்த் கிஷோரின் கணிப்புக்கு மாறாக ரிசல்ட் வந்துள்ளது. பாஜகவின் கோட்டையாக இருந்த உத்தரபிரதேசத்திலும் பின்னடைவை சந்தித்துள்ளது பாஜக..
கரண் தாப்பர் தனது இன்டர்வியூவில் பாஜகவுக்கு அலை வீசவில்லை என்பதை சில ஆதாரங்களோடு எடுத்து வைத்தபோது பிரசாந்த் கிஷோர் டம்ளரிலிருந்து தண்ணீரை எடுத்து குடித்தார். ஆனால் கருத்துக்கணிப்பு முடிவுகள் வந்தபிறகு “இனி அரசியல், தேர்தல் பற்றி போலி ஊடகவியலாளர்கள், வாய்ச் சவடால் அரசியல்வாதிகள், சமூக வலைதளங்களில் தங்களைத் தாங்களே நிபுணர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களின் பயனற்ற விவாதங்களில் நேரத்தை வீணடிக்காதீர்கள்” என்று பிரசாந்த் கிஷோர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
தற்போது கருத்துக்கணிப்புக்கு மாறாக தேர்தல் முடிவுகள் வந்துள்ள நிலையில், பிரசாந்த் கிஷோரை சமூக வலைதளங்களில் ரவுண்டு கட்டி வருகின்றனர். பாஜகவுக்கு சாதகமான உங்களது கணிப்பு என்ன ஆனது? தேர்தல் முடிவுகளுக்கு பிறகு எதுவும் பேசாமல் சைலண்ட் மோடுக்கு போனது என கலாய்த்து வருகின்றனர்.