காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ள கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடமிருந்து வசூலித்த சுமார் 30 லட்சம் ரூபாய் பணத்தைத் திருப்பித் தர முடியாது என்று கூறியிருப்பது அக்கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்துள்ள மக்கள் நீதி மய்யம், இம்முறை தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று சமீபத்தில் அறிவித்தது. ஆனால், முன்னதாகத் தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் மனுத் தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்த சுமார் 60 பேரிடம் தலா 50,000 விருப்ப மனு கட்டணமாக வசூலிக்கப்பட்டது. இதன் மூலம் மொத்தம் ₹30 லட்சம் வரை கட்சிக்குக் கட்டணமாகச் சேர்ந்துள்ளது. தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பெரும் தொகையைச் செலுத்திய தொண்டர்களும் நிர்வாகிகளும், தற்போது கட்சி போட்டியிடாது என்ற முடிவால் ஏமாற்றமடைந்துள்ளனர். இதையடுத்து, தாங்கள் செலுத்திய பணத்தைத் திருப்பித் தரக் கோரி அவர்கள் வலியுறுத்தி வந்தனர்.
இது குறித்து மக்கள் நீதி மய்யத்தின் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது விருப்ப மனு கட்டணம் என்பது Non-refundable.இந்தப் பணம் கட்சியின் வளர்ச்சி நிதிக்குச் சென்றுவிட்டது. மேலும், விருப்ப மனுத் தாக்கல் செய்தவர்கள் யாரும் அதிகாரப்பூர்வமாகப் பணத்தைத் திரும்பக் கேட்கவில்லை. சமூக வலைதளங்களில் இது குறித்துத் தவறான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.
யாரேனும் விருப்ப மனு கட்டணத்தைத் திரும்பக் கேட்டால், அது குறித்துப் பரிசீலிக்கப்படும் என்றும் ம.நீ.ம தலைமை தெரிவித்துள்ளது. இருப்பினும், எம்.எல்.ஏ சீட்டும் கிடைக்காமல், செலுத்திய பணமும் திரும்பக் கிடைக்காமல் இருப்பது கட்சி நிர்வாகிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.