Lok sabha election Result 2024 | ரிசல்ட் முடிவு..! இது வரலாற்று வெற்றி” மோடி நெகிழ்ச்சி
தொடர்ந்து மூன்றாவது முறையாக தேசிய ஜனநாயக கூட்டணி மீது நாட்டு மக்கள் நம்பிக்கை வைத்திருப்பதாக பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார். உலக நாடுகளே உற்று நோக்கிய இந்திய பொதுத் தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டு வருகின்றன.
அதில், பல திருப்பங்கள் அரங்கேறியுள்ளன. 290 தொகுதிகளில் பாஜக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. பாஜக மட்டும் 239 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இந்தியா கூட்டணி 235 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் மட்டும் 99 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. மத்தியில் ஆட்சி அமைக்க வேண்டுமானால் 272 எம்பிக்களின் ஆதரவு தேவை. ஆனால், இன்னும் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.
இந்த நிலையில், தொடர்ந்து மூன்றாவது முறையாக பாஜக கூட்டணி மீது மக்கள் நம்பிக்கை வைத்திருப்பதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். தனது எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், "தொடர்ந்து மூன்றாவது முறையாக தேசிய ஜனநாயக கூட்டணி மீது நாட்டு மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இது வரலாற்று வெற்றி. இந்த அன்புக்கும் ஆசீர்வாதத்திற்கும் எனது குடும்பத்தினருக்கு நன்றி.
நாட்டு மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற, புதிய ஆற்றல், புதிய உற்சாகம் மற்றும் புதிய தீர்மானங்களுடன் முன்னேறுவோம் என்று நான் உறுதியளிக்கிறேன். பாஜகவின் தொண்டர்கள் செய்த அர்ப்பணிப்பு மற்றும் அயராத உழைப்புக்கு எனது மனமார்ந்த நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார். ஒடிசாவில் ஆட்சியை கைப்பற்றியது குறித்து குறிப்பிட பிரதமர், "ஒடிசா மக்களுக்கு நன்றி. இது நல்லாட்சிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி. ஒடிசாவின் தனித்துவமான கலாச்சாரத்தை கொண்டாடுகிறோம். மக்களின் கனவுகளை நனவாக்கி, ஒடிசாவை முன்னேற்றத்தின் புதிய உச்சத்திற்கு கொண்டு செல்ல அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்" என பதிவிட்டுள்ளார்.