NEET UG exam result issue : மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை! காரணம் என்ன?

Continues below advertisement

நீட் தேர்வு வழக்கு விசாரணையில், யாராவது தவறு இழைத்திருந்தால் அதை முழுமையாக ஆராய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நீட் தேர்வு வினாத்தாள் மோசடி, ஆள் மாறாட்டம், தேர்வு முடிவுகளில் கருணை மதிப்பெண்கள் வழங்கிய விதம், ஒரே தேர்வறையைச் சேர்ந்த 8 மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்றது உள்ளிட்ட பல்வேறு குளறுபடிகளைக் குறிப்பிட்டு, இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதை எதிர்த்து ஏராளமான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. 

இந்த நிலையில் வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தேசியத் தேர்வுகள் முகமைக்கு நோட்டீஸ் அனுப்பியது. கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்ட 1,563 பேருக்கு மறுதேர்வு நடத்தப்படும் என்று தேசியத் தேர்வுகள் முகமை உறுதி அளித்தது. கருணை மதிப்பெண்கள் இல்லாமல் அவர்கள் பெற்ற மதிப்பெண்களே உண்மையான மதிப்பெண்களாக இருக்கும் எனவும் விருப்பமுள்ள மாணவர்கள் மட்டும் இந்தத் தேர்வை எழுதினால் போதும் எனவும் தெரிவிக்கப்பட்டது. 

நீட் மறு தேர்வை எழுதும் மாணவர்களுக்கு, ஜூன் 23ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. ஜூன் 30ஆம் தேதிக்கு முன்னதாகத் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று தேசிய தேர்வுகள் முகமை சார்பில் தெரிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில் வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘’நீட் தேர்வில் தவறு இருந்தால் மத்திய அரசும் தேசியத் தேர்வுகள் முகமையும் ஒப்புக்கொள்ள வேண்டும். வழக்கு விசாரணையில், யாராவது தவறு இழைத்திருந்தால் அதை முழுமையாக ஆராய வேண்டும். 0.001 சதவீதம் அலட்சியம் இருந்தாலும் ஆராய வேண்டும். மோசடி செய்து மருத்துவர் ஆகும் ஒருவர், சமூகத்தில் என்ன மாதிரியான தீங்கை ஏற்படுத்துவார்? தனிநபர் ஒட்டுமொத்த அமைப்புக்கும் ஆபத்தானவராக மாறும் சூழலை யோசித்துப் பார்க்க வேண்டும்.

மாணவர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு, நீட் தேர்வுக்குத் தயார் ஆகின்றனர்? தேர்வை நடத்தும் ஒரு முகமையாக நீங்கள் (தேசியத் தேர்வுகள் முகமை) நேர்மையாக நடந்துகொள்ள வேண்டும். தவறு நிகழ்ந்து இருந்தால், ’’ஆம் தவறு செய்யப்பட்டது; இந்த நடவடிக்கை எடுக்கப் போகிறோம்’’ என்று கூறுங்கள். குறைந்தபட்சம் அதுவாவது உங்களின் செயல்திறன் மீதான நம்பிக்கையை ஏற்படுத்தும். உங்களிடம் இருந்து (என்டிஏ) உடனடி நடவடிக்கையை எதிர்பார்க்கிறோம்’’ என நீதிபதிகள் கருத்துத் தெரிவித்தனர்.

தொடர்ந்து நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக மத்திய அரசும் தேசியத் தேர்வுகள் முகமையும் 2 வாரத்தில் பதிலளிக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், ஜூலை 6ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram