Tindivanam Murder: தீர்த்துக்கட்ட சொன்ன தாய்..திட்டம் போட்டு முடித்த மகன்!குப்பை கொட்டியதால் கொடூரம்
திண்டிவனத்தில் சாதரண குப்பை தகராறில் கடையின் ஷட்டரை பூட்டி இளைஞர் வெட்டி படு கொலைசெய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த பாம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த ஜெயபால் – கற்பகம் தம்பதியின் ஒரே மகன் தினேஷ், 23. ஐந்து சகோதரிகளுக்குப் பிறகு பிறந்த இவர், குடும்ப சுமையை ஏற்க சென்னை சென்று முடிதிருத்தும் தொழில் கற்றார்.
பின்னர் தீவனூரில் ஒரு கடையில் வேலை பார்த்துவிட்டு, மூன்று மாதங்களுக்கு முன்பு தீவனூர் - ரெட்டணை சாலையில் சொந்தமாக சலூன் கடை தொடங்கி நடத்தி வந்தார். இவரது கடைக்கு அருகிலேயே ஓய்வுபெற்ற ராணுவ வீரர் ஜேசு ஜே ஜெயமாணிக்கம், மற்றும் அவரது மனைவி சுமதி, , வசித்து வந்தனர்.
இருவரது இடத்துக்கும் இடையில் இருந்த அரசு புறம்போக்கு நிலத்தில் தினேஷ் கடையின் முடிக் கழிவுகளை கொட்டி வந்ததாகக் கூறப்படுகிறது. இதை சுமதி பலமுறை கண்டித்ததால் இரு தரப்புக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்தது. இது தொடர்பாக ரோஷனை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, போலீசார் இரு தரப்பையும் அழைத்து சமாதானம் செய்து அனுப்பினர்.
ஆனால் ஆத்திரம் தீராத சுமதி, புதுச்சேரி மேட்டுப்பாளையத்தில் வசிக்கும் தனது மகனும், புதுச்சேரி மற்றும் சென்னையில் கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய ரௌடியுமான பரத்திடம் முறையிட்டு அழுதுள்ளார். தாயின் வார்த்தையை கேட்ட பரத், தினேஷை தீர்த்துக்கட்ட முடிவு செய்து கடந்த ஐந்து நாட்களாக திண்டிவனம் பகுதியில் தங்கி, தினேஷின் நடமாட்டத்தை நோட்டமிட்டு கொலைக்கு திட்டம் தீட்டியுள்ளார்.
இந்நிலையில் தினேஷ், கடந்த ஜூன் 7-ஆம் தேதி மீண்டும் கடையை திறந்தார். இதை நோட்டமிட்ட பரத் தலைமையிலான கூலிப்படையினர் ஜூன் 8-ஆம் தேதி மதியம் 2:10 மணியளவில் வாடகை எர்டிகா காரில் புதுச்சேரி கூலிப்படையினருடன் தீவனூர் சலூன் கடைக்கு வந்தனர். கடையின் ஷட்டரை இறக்கி பூட்டிவிட்டு, கடையில் தனியாக இருந்த தினேஷை கண் இமைக்கும் நேரத்தில் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பியோடினர்.
ரத்த வெள்ளத்தில் அலறித் துடித்த தினேஷை அக்கம்பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பட்டப்பகலில் நடந்த இந்த கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. தகவலறிந்த ரோஷனை போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
கொலைக்கு தூண்டிய ஓய்வுபெற்ற ராணுவ வீரர் ஜேசு ஜே ஜெயமாணிக்கம் மற்றும் அவரது மனைவி சுமதி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் கொலையில் தொடர்புடைய புதுச்சேரியை சேர்ந்த வைசாக் 25, ஜெயக்குமார் 27, ஜோசப் லெனின் 21 ஆகிய 3 பேரையும் தனிப்படை போலீசார் மடக்கிப் பிடித்தனர். இவர்களும் பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடையவர்கள். கொலையாளிகள் தப்பிச் செல்ல பயன்படுத்திய எர்டிகா கார் புதுச்சேரி மேட்டுப்பாளையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் மொத்தம் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளி ரௌடி பரத் மற்றும் மீதமுள்ள கூலிப்படையினரை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர். காவல் நிலையம் வரை சென்று சமாதானம் ஆன ஒரு சாதாரண குப்பைத் தகராறு, கூலிப்படையை ஏவி இளைஞர் படுகொலை செய்யப்பட்டதில் முடிந்த சம்பவம் திண்டிவனம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்






















