’சூலூர் வழக்கில் சிரித்த பெண் IG’ யார் இந்த ரம்யா பாரதி?

Continues below advertisement

கோவை சிறுமி கொலை வழக்கில் குற்றவாளிகளை வெறும் 10 மணி நேரத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுத்த காவல்துறை அதிகாரி... இன்று ஒரு வீடியோவால் கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறார். யார் இந்த மேற்கு மண்டல ஐ.ஜி ரம்யா பாரதி?

கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புக்கு முன், மேற்கு மண்டல ஐ.ஜி ரம்யா பாரதி, சக காவல்துறை அதிகாரிகளுடன் சிரித்துப் பேசிக்கொண்டிருந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவின.

அந்த வீடியோ வெளியானதைத் தொடர்ந்து, மிக முக்கியமான மற்றும் உணர்வுப்பூர்வமான வழக்கில் இவ்வாறு நடந்துகொண்டது சரியா என்ற கேள்விகள் எழத் தொடங்கின. இதனால் ரம்யா பாரதிக்கு எதிராக விமர்சனங்களும் அதிகரித்தன.

ஆனால் மறுபுறம், இந்த வழக்கில் மிகத் தீவிரமாக செயல்பட்டு, போலீசாருக்கு உடனடி அறிவுறுத்தல்கள் வழங்கி, வெறும் 10 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுத்ததும் ரம்யா பாரதிதான் என்று கூறப்படுகிறது.

பாராட்டுகளை பெற வேண்டிய ஒரு அதிகாரி, சில விநாடிகள் பதிவான ஒரு காட்சியால் விமர்சனங்களை சந்தித்து வருகிறார் என்பதும் இந்த விவகாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

அப்படியானால் யார் இந்த ரம்யா பாரதி?

2008ஆம் ஆண்டு ஐபிஎஸ் பேட்சை சேர்ந்த ரம்யா பாரதி, தனது 21வது வயதிலேயே UPSC தேர்வில் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்று ஐபிஎஸ் அதிகாரியானவர். சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் சமூகவியல் படித்த அவர், எந்த பயிற்சி மையத்திற்கும் செல்லாமல் தனது சொந்த முயற்சியிலேயே தேர்வுக்குத் தயாராகி வெற்றி பெற்றார்.

கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் ஒரு நாளைக்கு சுமார் 15 மணி நேரம் வரை தொடர்ந்து படித்ததாக கூறப்படுகிறது.

தனது பெற்றோரைப் போலவே அரசு பணியில் இருந்து மக்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணமே இந்த பாதையை தேர்வு செய்ய காரணம் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

காவல்துறையில் இணைந்த பிறகு, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தத் தொடங்கினார். குறிப்பாக, ஓசூர் மற்றும் கோவையில் பணியாற்றிய காலத்தில், காவல் நிலையத்திற்கு வர தயங்கிய பெண்களிடம் நேரடியாக சென்று விசாரணை நடத்தி, அவர்களுக்கு நீதியை பெற்றுத் தர முயற்சிகளை மேற்கொண்டார்.

பின்னர் வடசென்னையின் இணை ஆணையராக பொறுப்பேற்ற அவர், "வடசென்னை குற்றங்களின் மையம்" என்ற பொதுவான பார்வையை மாற்ற முயற்சித்தார். இரவு நேரங்களில் சைக்கிளில் தெரு தெருவாக சென்று ரோந்து பணிகளிலும் ஈடுபட்டார். குறிப்பாக ஒரு பெண் அதிகாரி இரவு நேரங்களில் தனியாக பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டது, அப்பகுதி பெண்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

மேற்கு மண்டல ஐ.ஜியாக பொறுப்பேற்ற பிறகும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக பல நடவடிக்கைகளை மேற்கொண்டார். பொதுமக்கள் நேரடியாக ஐ.ஜி அலுவலகத்தை தொடர்புகொண்டு புகார்களை தெரிவிக்கவும் ஏற்பாடுகளை செய்திருந்தார். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து வாரந்தோறும் ஆய்வுக் கூட்டங்களையும் நடத்தி வந்தார்.

இந்நிலையில்தான், சூலூர் சிறுமி வழக்கிலும் துரிதமாக செயல்பட்டு, போலீசாருக்கு அறிவுறுத்தல் வழங்கி 10 மணி நேரத்திற்குள் குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட கோவை மண்டல ஐ.ஜி. ரம்யா பாரதியே காரணமாக இருந்தார். ஆனால், செய்தியாளர்கள் யாரும் இல்லாதபோது, லைவ் ரெக்கார்ட் ஆன் செய்யப்பட்ட கேமரா முன்னாள், தனிப்பட்ட முறையில் அதிகாரிகளுடன் அவர் சிரித்துக்கொண்டு பேசியது அவருக்கு எதிராக மாறியிருக்கிறது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola