Child Abuse : கும்மிடிப்பூண்டி கொடூரம்குழந்தை பாலியல் வன்கொடுமை! உண்மையை உடைத்த காவல்துறை!

Continues below advertisement

கும்மிடிப்பூண்டி அருகே, 3 வயது வடமாநில பெண் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பீகார், உத்தரப்பிரதேசம், ஒடிசா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், அங்குள்ள வடமாநில தொழிலாளர்கள் குடியிருப்பில் வசித்து வரும் 3 வயது பெண் குழந்தை திடீரென காணாமல் போயுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், பொதுமக்களின் உதவியுடன் குழந்தையைத் தேடி வந்தனர்.

அப்போது இயற்கை உபாதை கழிக்கச் சென்ற பெண்கள் சிலர், அருகில் இருந்த முட்புதர் ஒன்றில் பச்சிளம் குழந்தை படுகாயங்களுடன் மயங்கிக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே மீட்கப்பட்ட அந்த குழந்தைக்குக் கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காகச் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்த பச்சிளம் குழந்தை, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.

முன்னதாக நடத்திய விசாரணையில், அருகில் வசித்து வந்த வடமாநில இளைஞர் ஒருவர் அந்த குழந்தையிடம் பாலியல் கொடூரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த செயலில் ஈடுபட்ட வடமாநில இளைஞரைப் பொதுமக்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இதனிடையே, ஒரே அறையில் தங்கியிருந்த வடமாநில இளைஞர்கள் சேர்ந்து குழந்தையைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்திருப்பதாகக் கூறி, குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் சிப்காட் காவல் நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முற்றுகையில் ஈடுபட்ட பொதுமக்களிடம் காவல்துறையினர் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, குழந்தையிடம் அத்துமீறலில் ஈடுபட்ட பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பிபின் மஞ்சி (19) என்ற இளைஞரைக் கைது செய்துள்ளதாகத் தெரிவித்தனர்.

மேலும் இது கூட்டு பாலியல் வன்கொடுமை இல்லை என காவல்துறை தரப்பில் விளக்கமளித்துள்ளது. இது குறித்து அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில் திருவள்ளூர் மாவட்டம், கும்பிடிப்பூண்டி உட்கோட்டம் சிப்காட் காவல் நிலைய ல்லைக்குட்பட்ட பகுதியில் ஒரு சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகத் தகவல் கிடைத்தது உடனடியாக இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணையில் குற்றம் சாட்டப்பட்ட நபர் கைது செய்யப்பட்டார். இச்சம்பவத்தில் ஒருவர் மட்டுமே ஈடுபட்டிருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவரும் பாதிக்கப்பட்ட சிறுமியும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இது குறித்த கூடுதல் விசாரணை நடைபெற்று வருகிறது.இச்சம்பவம் தொடர்பாக சரிபார்க்கப்படாத தகவல்கள் மற்றும் பொய்யான செய்திகளை எந்த ஒரு ஊடகத்திலும் பரப்புவதை பொதுமக்கள் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola