LPG Cylinder : 900 ரூபாயை தொட்ட Gas விலை! 2014-ல் பாஜக சொன்னதும் - செய்ததும்! Detail Report

Continues below advertisement

“பெட்ரோல் மீதான அதிகப்படியான விலை உயர்வு ஆட்சியின் தோல்விக்கு முக்கிய உதாரணம்” இதைச் சொன்னது ராகுல் காந்தியோ அல்லது வேறு எந்த எதிர்கட்சிகளோ அல்ல. சொன்னது பிரதமர் மோடி. சொன்ன ஆண்டு 2012 தேதி மே 23. ”சிலிண்டரின் விலை 50 ரூபாய் உயர்ந்திருக்கிறது.

ஆனால் தங்களை சாமானியர்களின் அரசு என்று சொல்லிக்கொள்கிறார்கள். என்ன ஒரு அவமானம்.” இதைச்சொன்னது தற்போதைய அமைச்சர் ஸ்மிருதி இராணி. இந்த அரசால் விலை உயர்வை கட்டுப்படுத்த முடியவில்லை? மானியமில்லாத சிலிண்டரின் விலை 26 ரூபாய் உயர்ந்திருக்கிறது. இதற்கு சோனியா காந்தியாலோ, ராகுல் காந்தியாலோ, மன்மோகன் சிங்காலோ பதில் சொல்ல முடியாது. ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை தேர்தல் பயணங்களில் கூறுவார்கள். இதைச் சொன்னது முன்னாள் அமைச்சர் ரவிசங்கர் பிரசாத். ஆனால் தற்போது என்ன நடக்கிறது ? காங்கிரஸ் ஆட்சியில் விலை உயர்வால் சாதாரண மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று குற்றம்சாட்டிய பாஜகவின் ஆட்சியில் பெட்ரோல், டீசல், கேஸ் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருக்கிறது.

நேற்றுவரை 875 ரூபாயாக இருந்த சிலிண்டரின் விலை இன்று முதல் 900 ரூபாய். இந்த ஆண்டின் தொடக்கத்தில் சிலிண்டரின் விலை 747 ஆக இருந்த நிலையில் 8 மாதத்திற்குள்ளாக 190 ரூபாய் உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்த 25 ரூபாய் விலை உயர்வும் 25 ரூபாய் விலை உயர்த்தப்பட்ட 15 நாட்களில் உயர்த்தப்பட்டிருக்கிறது. வணிகப்பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்படும் சிலிண்டரின் விலை ரூ 75 உயர்த்தப்பட்டு 1693 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் ஏற்கனவே சாமானியர்கள் கடுமையாக பாதிப்படைந்திருக்கும் நிலையில் சிலிண்டர் விலை உயர்வும் சுமையை மேலும் மேலும் அதிகரிக்கிறது. காங்கிரஸ் ஆட்சியில் சிலிண்டர் விலை 1234 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டபோது ஏன் கேட்கவில்லை என்று கேட்கிறார்கள். காங்கிரஸ் ஆட்சியில் சிலிண்டரின் விலை 1,234 ரூபாய்க்கு விற்பனையானது உண்மைதான். ஆனால் அதற்கான மானியம் அதிகரிக்கப்பட்டதால் சுமை மக்கள் தலையில் ஏறவில்லை. சொல்லப்போனால் 1,234 ரூபாய் சிலிண்டரின் விலை என்பதே பல பேருக்கு அப்போது தெரிந்திருக்காது. ஆனால் தற்போதைய நிலை அப்படி அல்ல. சிலிண்டருக்கு வழங்கப்பட்டு வந்த மானியம் கடந்த மே மாதத்திற்குப் பிறகு யாருக்கும் வழங்கப்படவில்லையெனும் நிலையில், முழு தொகையையும் செலுத்தி சிலிண்டரை பொதுமக்கள் பெற வேண்டியிருக்கிறது. கேஸ், டீசல், பெட்ரோல் விலை உயர்கிறது என்பதை தான் ஜிடிபி உயர்கிறது என்று பிரதமர் மோடி சொல்கிறார் போல என்று கூறியதோடு, காங்கிரஸ் ஆட்சியை விட்டுப் போகும்போது 410 ரூபாயாக இருந்த கேஸ் விலை இப்போது 885 ரூபாய்க்கு வந்திருக்கிறது.

7 ஆண்டுகளில் 116% விலை உயர்ந்திருக்கிறது என்று குற்றம்சாட்டியுள்ளதோடு, கடந்த 7 ஆண்டுகளில் பெட்ரோல், டீசல், கேஸ் மூலமாக 23 லட்சம் வருவாய் எங்கே போனது கேள்வி எழுப்பியிருக்கிறார் ராகுல்காந்தி. பொதுமக்கள் அனைவருக்கும் எரிவாயு அடுப்பு கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் மானியத்தை விட்டுக்கொடுக்க முன்வரவேண்டும் என்று கோரியிருந்தார் பிரதமர் மோடி. பொதுமக்கள் பலரும் தங்கள் சிலிண்டருக்கு கிடைத்து வந்த மானியத்தை விட்டுக்கொடுத்தனர். பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட எரிவாயு சிலிண்டர்களை பலர் வாங்கியதோடு சரி. மீண்டும் பயன்படுத்தவே இல்லை என்று ஏற்கனவே சிஏஜி அறிக்கை வெளியிட்டிருந்தது. நிலமை இப்படி இருக்க சிலிண்டரின் விலை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டேப் போவது, மானியத்தை விட்டுக்கொடுத்தவர்களை எரிவாயு அடுப்பையே விட்டுக்கொடுத்து விறகு அடுப்புக்கு மாற்றும் சூழ்நிலை உருவாகும். பெட்ரோல், டீசல் விலை உயர்வைப் பற்றி கேள்வி எழுப்பப்படும்போதெல்லாம் பல்வேறு விளக்கங்கள் பாஜக தரப்பிடமிருந்து வரும்.

பொதுமக்கள் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துவதால் பெட்ரோல், டீசல் விலை உயர்வு பொதுமக்களை பாதிக்காது என்று கூறியிருந்தார் முன்னாள் அமைச்சர் ஒருவர். விலை உயர்வால் வரும் பணத்தை நலத்திட்டங்களுக்காக சேமித்து, செலவிடுகிறது என்று கூறியிருந்தார் மற்றொருவர். விலை உயர்வு நுகர்வோரை எலக்ட்ரிக் வாகனங்களை நோக்கி தள்ளும். டிமாண்ட் குறையும் போது பெட்ரோல் விலை கட்டுக்குள் இருக்கும் என்று கூறியிருந்தார் இன்னொருவர்.

ஒவ்வொரு முறை விலை ஏறும்போதெல்லாம் இப்படி காரணங்களை ஒவ்வொருவராக கூறுவர். இதே வேகத்தில் விலையேற்றம் இருந்தால் இந்த ஆண்டுக்குள்ளாக சிலிண்டர் விலை 1000 ரூபாயை தொட்டுவிடும் என்ற நம்பிக்கை இருக்கிறது. எரிவாயு அடுப்பு விலை ஏற்றம் மக்களை இண்டக்‌ஷன் அடுப்பை நோக்கி நகர்த்தும். டிமாண்ட் குறையும் போது விலை கட்டுக்குள் இருக்கும் என்று எந்த அமைச்சரும் சொல்லாத வரை சரிதான். “அச்சே தின் ஆனே வாலே ஹெய்ன்” என்று சொல்லி பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்து 7 ஆண்டுகளைக் கடந்துவிட்டது. எப்போது வரும் அந்த “அச்சே தின்”.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram