திருச்சி: குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரின் மனைதை கவரும் வண்ணத்துப்பூச்சி பூங்கா

திருச்சி மாவட்டம், காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளுக்கிடையே 27 ஏக்கர் பரப்பளவில் இந்த வண்ணத்துப்பூச்சி பூங்கா அமைந்துள்ளது.

Continues below advertisement

திருச்சி மாவட்டம் என்றாலே வரலாற்று சிறப்பு மிக்க இடங்களான முக்கொம்பு, மலைக்கோட்டை, கல்லணை, போன்ற சுற்றுலா தளங்கள்தான் நம் நினைவுக்கு வரும். ஆனால், திருச்சி ஸ்ரீரங்கத்தை அடுத்த மேலூர் நடுக்கரை கிராமத்தில், உள்ள வண்ணத்துப்பூச்சி பூங்கா பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? வாங்க பார்க்கலாம்.. காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளுக்கிடையே 27 ஏக்கர் பரப்பளவில் இந்த வண்ணத்துப்பூச்சி பூங்கா அமைந்துள்ளது. இது தமிழ்நாடு அரசின் வனத்துறையால் பராமரிக்கப்படுகிறது.மேலும்  தாவரங்களின் மகரந்தச் சேர்க்கைக்கு பல்வேறு பூச்சி இனங்கள் உதவிபுரிந்தாலும், இதில் வண்ணத்துப்பூச்சிக்கு முக்கியமான பங்குண்டு. பெருகிவரும் நகரமயமாதல் காரணமாக, வனப்பகுதிகளின் பரப்பளவு குறைந்து வரும் சூந்நிலையில், அழிந்து வரும் வண்ணத்துப்பூச்சி இனங்களைப் பாதுகாக்கவும், அதன் இனத்தைப் பெருக்கவும், திருச்சியில் வண்ணத்துப்பூச்சி பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement


தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2012-ம் ஆண்டு, ஆசியாவிலேயே மிகப்பெரிய வண்ணத்துப்பூச்சி பூங்காவாக இதனை அறிவித்தார். தற்போது இயற்கை அழகு மிகுந்த சுற்றுலா இடமாக இது மாறியுள்ளது. இங்கு, இந்தியா மட்டுமன்றி வெளிநாடுகளிலிருந்தும் ஆராய்ச்சி மற்றும் சுற்றுலாவுக்காக அதிக அளவில் மக்கள் வந்து செல்வார்கள். ஸ்ரீரங்கத்தை அடுத்த மேலூர் நடுக்கரை கிராமத்தில், காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளுக்கிடையே 27 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள  இந்த பூங்கா எப்போதும் பசுமையாகக் காட்சியளிக்கும்படி உருவாக்கப்பட்டுள்ளது.  இந்த வண்ணத்துப்பூச்சிப் பூங்காவுக்கு ஆராய்ச்சியாளர்கள், சுற்றுலாப் பிரியர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், மாணவர்கள் மற்றும் குழந்தைகளோடு குடும்பங்கள் என அனைத்து தரப்பினரும் வர, இது ஒரு முழுமையான சுற்றுலாத் தலமாக மாறியிருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.  


இந்த பூங்காவில் 46-க்கும் மேற்பட்ட வகையான  பட்டாம்பூச்சிகள் இருப்பதாக அதிகாரிகள் கூறுகிறார்கள். மேலும் புல்வெளிகளும், பூச்செடிகளும் அவற்றில் பூத்துக் குலுங்கும் பூக்களும் உங்கள் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. ஆங்காங்கே சில பதாகைகள் - பூக்கள்/செடிகளின் பெயர்கள், பட்டாம்பூச்சிகளின் வகைகள், அவற்றின் பெயர்கள் எனப் பார்வையாளர்களுக்குத் தகவல் தெரிந்துகொள்ளும் வகையில் வைக்கப்பட்டுள்ளது.


இந்த பூங்காவில் வண்ணத்துப்பூச்சிகளுக்கு மிகவும் பிடித்த சின்யா, டிரைக்டரி, கொரட்டல் ஏரியா, பென்டாஸ், கொன்றை, மேரி கோல்டு பூச்செடிகள், செண்பக மரம், மகிழ மரம், எனச் சுமார் முண்ணூற்றுக்கும் மேற்பட்ட பல்வேறு வகை வகையான தாவரங்கள் உள்ளன. வண்ணத்துப்பூச்சிகளின்  உருவத்தில் குகை வழிப்பாதைகள், மரங்கள் ,மற்றும் செடிகளுடன் ,கூடிய நட்சத்திர வனம், புல்தரைகள், பல்வேறு நீர்த் தாவரங்கள் அடங்கிய குட்டைகள், பிரமாண்ட வண்ணத்துப்பூச்சி சிலைகள், என அனைத்தும் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பூங்காவில் உள்ள செயற்கை நீரூற்றுகளில் தண்ணீர் பீய்ச்சி அடிக்கின்ற காட்சி  பார்வையாளர்களை மகிழ்ச்சி அடைய வைக்கிறது.


இந்த பூங்கா சுற்றுலாத் தலமாகவும், ஆய்வு மையமாகவும் விளங்கும் இந்தப் பூங்காவுக்கு வாரந்தோறும் சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாள்களில் 2,000-க்கும் மேற்பட்டோரும், வார நாட்களில் 800 பேருக்கும் மேல் வந்து செல்வார்கள், குறிப்பாக அரசுப் பேருந்தை அதிகமாக இயக்கினால், பூங்காவுக்கு வருவோரின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மொத்தத்தில் இந்த வண்ணத்துப் பூச்சி பூங்கா நம் அனைவருக்கும் ஒரு பொழுதுபோக்கு இடமாகவும், பார்ப்பதற்கே மிகவும் அழகான, மன அமைதி தரும் இடமாகவும் இருக்கும். 

Continues below advertisement
Sponsored Links by Taboola