தமிழக இரயில் பயணிகள் கவனத்திற்கு: பிப்ரவரி 10 முதல் முக்கிய இரயில்கள் ரத்து மற்றும் சேவையில் மாற்றம்!
தமிழகத்தில் பல்வேறு இரயில்வே கோட்டங்களில் நடைபெறவுள்ள அத்தியாவசிய பொறியியல் பராமரிப்பு பணிகள் காரணமாக, பிப் 10-ம் தேதி முதல் இரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்படுவதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது.

திருச்சி: திருச்சிராப்பள்ளி, மதுரை, சேலம் மற்றும் சென்னை உள்ளிட்ட பல்வேறு இரயில்வே கோட்டங்களில் நடைபெறவுள்ள அத்தியாவசிய பொறியியல் பராமரிப்பு பணிகள் காரணமாக, பிப்ரவரி 10-ம் தேதி முதல் இரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்படுவதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது.
தென்னக இரயில்வேயின் திருச்சிராப்பள்ளி, மதுரை, சேலம் மற்றும் சென்னை உள்ளிட்ட பல்வேறு கோட்டங்களில் தண்டவாளப் பராமரிப்பு மற்றும் மேம்பட்ட பொறியியல் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக, பிப்ரவரி 10-ம் தேதி முதல் பிப்ரவரி இறுதியில் சில நாட்கள் வரை அந்தந்த வழித்தடங்களில் இயங்கும் விரைவு இரயில்கள் மற்றும் பயணிகள் இரயில்களின் சேவையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் நடைபெறும் இந்தப் பணிகளால், பல இரயில்கள் பகுதி ரத்து செய்யப்பட்டும், சில முக்கிய இரயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டும் உள்ளன. பயணிகள் தங்களின் பயணத்தைத் திட்டமிடும் முன் இந்த மாற்றங்களைச் சரிபார்த்துக் கொள்ளுமாறு இரயில்வே நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
இரயில் சேவைகள் பகுதி ரத்து
பராமரிப்பு பணிகள் காரணமாக கீழ்க்கண்ட இரயில்கள் குறிப்பிட்ட நிலையங்கள் வரை மட்டுமே இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது..
திருச்சி - காரைக்கால் டெமு (76820): பிப்ரவரி 10 முதல் 15 வரை திருச்சியிலிருந்து காலை 08.40-க்கு புறப்படும் இரயில் திருவாரூர் வரை மட்டுமே இயங்கும்.
* மன்னார்குடி - மயிலாடுதுறை (56002): பிப்ரவரி 11, 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் மன்னார்குடியில் இருந்து புறப்படும் இரயில் பேரளம் வரை மட்டுமே செல்லும்.
* திருச்சி - பாலக்காடு டவுன் (16843): பிப்ரவரி 13, 15 மற்றும் 17 ஆகிய தேதிகளில் திருச்சியிலிருந்து மதியம் 13.00-க்கு புறப்படும் இரயில் ஊத்துக்குளி வரை மட்டுமே இயங்கும்.
* திருச்சி - ஈரோடு (56809): பிப்ரவரி 16, 19, 23 மற்றும் 26 ஆகிய தேதிகளில் திருச்சியிலிருந்து புறப்படும் இரயில் கரூர் வரை மட்டுமே செல்லும்.
* தாம்பரம் - விழுப்புரம் (66045): பிப்ரவரி 12, 14 மற்றும் 17 ஆகிய தேதிகளில் தாம்பரத்திலிருந்து புறப்படும் இரயில் திண்டிவனம் வரை மட்டுமே செல்லும்.
முக்கிய இரயில்கள் திசைமாற்றம்
மதுரை கோட்டத்தில் நடைபெறும் பணிகள் காரணமாக, சில முக்கிய இரயில்கள் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி மற்றும் திருச்சி வழியாக திசைமாற்றி விடப்பட்டுள்ளன. இதனால் மதுரை மற்றும் திண்டுக்கல் நிறுத்தங்கள் தவிர்க்கப்படும்.
* செங்கோட்டை - மயிலாடுதுறை (16848): பிப்ரவரி 12 முதல் 17 வரை.
* நாகர்கோவில் - மும்பை CSTM (16352): பிப்ரவரி 12 மற்றும் 15-ம் தேதிகளில்.
* கன்னியாகுமரி - ஹவுரா (12666): பிப்ரவரி 14-ம் தேதி.
* கன்னியாகுமரி - ஐதராபாத் (07229): பிப்ரவரி 13-ம் தேதி.
இந்த திசைமாற்றப்பட்ட இரயில்களுக்கு அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டையில் கூடுதல் நிறுத்தங்கள் வழங்கப்படும்.
தொடக்க நிலையங்கள் மாற்றம்
* காரைக்கால் - திருச்சி (76819): பிப்ரவரி 10 முதல் 15 வரை காரைக்காலுக்கு பதிலாக திருவாரூரிலிருந்து மாலை 16.15-க்கு தனது பயணத்தைத் தொடங்கும்.
* விழுப்புரம் - சென்னை பீச் (66046): பிப்ரவரி 12, 14 மற்றும் 17 ஆகிய தேதிகளில் விழுப்புரத்திற்கு பதிலாக திண்டிவனத்திலிருந்து மதியம் 14.15-க்கு புறப்படும்.
* பாலக்காடு டவுன் - திருச்சி (16844): பிப்ரவரி 12, 13 தேதிகளில் கஞ்சிக்கோட்டிலிருந்தும், பிப்ரவரி 14 முதல் 16 வரை வாளையாரிலிருந்தும் புறப்படும்.
இரயில்கள் தாமதம் (நேர ஒழுங்குமுறை)
பராமரிப்பு பணிகள் காரணமாக வழியில் சில இரயில்கள் நிறுத்தி வைக்கப்படும்:
* புதுச்சேரி - காக்கிநாடா போர்ட் (17656): பிப்ரவரி 12 அன்று 120 நிமிடங்களும், பிப்ரவரி 14 அன்று 90 நிமிடங்களும் தாமதமாகும்.
* புதுச்சேரி - காச்சிகுடா (17654): பிப்ரவரி 17 அன்று 120 நிமிடங்கள் தாமதமாகும்.
* திருச்சி - மயிலாடுதுறை (16834): பிப்ரவரி 10-ம் தேதி ஆலாக்குடியில் 20 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்படும்.
பயணிகள் இந்த மாற்றங்களைக் கவனித்து தங்கள் பயணத்தைத் திட்டமிடுமாறு திருச்சிராப்பள்ளி கோட்ட மக்கள் தொடர்பு அலுவலர் வினோத் தெரிவித்துள்ளார்.
























