இந்தியாவில் ரயில் போக்குவரத்து என்பது மிக முக்கிய போக்குவரத்து சேவையாக இருந்து வருகிறது. குறிப்பாக தொலைதூரம் பயணிப்பவர்களுக்கு, ரயில் சேவை வரப்பிரசாதமாக இருந்து வருகிறது. இந்திய ரயில்வே நாள்தோறும் 13,000 ரயில்களை இயக்கி வருகிறது. இதில் நாள்தோறும் 4 கோடி மக்கள் பயணிக்கிறார்கள். சாதாரண புறநகர் ரயில்கள், விரைவு ரயில்கள், வந்தே பாரத் ரயில்கள், சரக்கு ரயில்கள் என இதில் ஏராளம்.
ஒவ்வொரு விழாக்காலங்களில் பொதுமக்களின் போக்குவரத்து வசதிக்காக ரயில்வே நிர்வாகம் பல்வேறு அறிவிப்புகளை விடுத்து வருகிறது. இந்த நிலையில், தை பூசத்தை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் மற்றும் பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் ‘தை’ மாதத்தில், 27 நட்சத்திரங்களில் 7ஆவது நட்சத்திரமான பூசம் நட்சத்திரம் முழுநிலவுடன் சேர்ந்து வரும் நாள் தைப்பூசமாக கொண்டாடப்படுகிறது. அசுரர்களை அழிக்க முருகனுக்கு பார்வதி தேவி ஞான சக்தியான வேலை வழங்கிய நாளே, தைப்பூசம் எனவும் கூறப்படுகிறது. இந்தநிலையில் வரும் ஞாயிறு ‘தை பூசத்தை’ முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ரயில் எண் 06145, மதுரை சந்திப்பு – பழனி முன்பதிவு செய்யப்படாத விரைவு சிறப்பு ரயில் பிப்ரவரி 1ஆம் தேதி காலை 06.00 மணிக்கு மதுரை சந்திப்பிலிருந்து புறப்பட்டு அதே நாளில் காலை 08.30 மணிக்கு பழனியை வந்தடையும். மறுமார்க்கமாக ரயில் எண். 06146, பழனி – மதுரை சந்திப்பு முன்பதிவு செய்யப்படாத விரைவு சிறப்பு ரயில் 1ஆம் தேதி பிற்பகல் 2.25 மணிக்கு பழனியில் இருந்து புறப்பட்டு அதே நாளில் மாலை 5.00 மணிக்கு மதுரை சந்திப்பை வந்தடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு வரும் 30-ந் தேதி இரவு 11.45 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் (வண்டி எண்: 06001) மறுநாள் காலை 11.15 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும். மறுமார்க்கத்தில், திருநெல்வேலியில் இருந்து தாம்பரத்திற்கு பிப்ரவரி 1-ந் தேதி இரவு 10.35 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06002) மறுநாள் காலை 9.30 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும்.இதேபோல், தாம்பரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு வரும் 31-ந் தேதி இரவு 11.50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06003) மறுநாள் காலை 11 மணிக்கு தூத்துக்குடியை சென்றடையும்.மறுமார்க்கத்தில் தூத்துக்குடியில் இருந்து பிப்ரவரி 1-ந் தேதி இரவு 11.55 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06004) மறுநாள் காலை 11.30 மணிக்கு சென்னை கடற்கரை ரயில் நிலையத்தை சென்றடையும். இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று (வியாழக்கிழமை) மதியம் 2.15 மணிக்கு தொடங்குகிறது.
இதே நேரத்தில் தைப்பூசம் மற்றும் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 30/01/2026 (வெள்ளிக்கிழமை) அன்று 360 பேருந்துகளும், 31/01/2026 (சனிக்கிழமை) 485 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 30/01/2026 வெள்ளிக் கிழமை அன்று 60 பேருந்துகளும் 31/01/2026 சனிக்கிழமை அன்று 60 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.