indian railway : ரயில் பயணத்தில் குழந்தைகளுக்கான சூப்பர் சலுகைகள்! 5 வயது வரை இலவசம், முழு விபரம் இதோ!
ரயிலில் பயணிக்கும் குழந்தைக்கு 5 வயது நிறைவடையவில்லை என்றால் அவர்களுக்கு ரயிலில் முழுக்க முழுக்க இலவசம் தான். நீங்கள் தனியாக டிக்கெட் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை.
இந்தியாவில் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக இருப்பது ரயில் சேவை. ரயில்களில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். அவர்களுக்காக பல்வேறு சலுகைகள் திட்டங்களை கொண்டு வருகிறது. குறிப்பாக, டிக்கெட் எடுப்பதில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக தொலைதூரம் பயணிப்பவர்களுக்கு, ரயில் சேவை வரப்பிரசாதமாக இருந்து வருகிறது. இந்திய ரயில்வே நாள்தோறும் 19,000 ரயில்களை இயக்கி வருகிறது. இதில் நாள்தோறும் 4 கோடி மக்கள் பயணிக்கிறார்கள். சாதாரண புறநகர் ரயில்கள், விரைவு ரயில்கள், வந்தே பாரத் ரயில்கள், சரக்கு ரயில்கள் என இதில் ஏராளம். குறிப்பாக குறைந்த கட்டணத்தில் தொலை தூர இடங்களுக்கு களைப்பின்றி செல்ல முடியும் என்பதால் அனைவரும் ரயில் பயணத்தை நாடி வருகின்றனர்.
இந்த நிலையில், இந்திய ரயில்வே பயணிகளுக்கு ஏராளமான சலுகைகளை வாரி வழங்கி வருகிறது. அந்த வகையில் ரயிலில் குழந்தைகளுக்கும் டிக்கெட் கட்டண சலுகை (Child Fare in Railways) உள்ளது. ரயில்வேயின் புதிய விதிகள் (Railway Ticket Rules) குறித்து விரிவாக பார்க்கலாம். உங்கள் செல்ல குழந்தைக்கு 5 வயது நிறைவடையவில்லை என்றால் அவர்களுக்கு ரயிலில் முழுக்க முழுக்க இலவசம் தான். நீங்கள் தனியாக டிக்கெட் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை.
ஆனால் உங்கள் குழந்தைக்கு தனியாக பெர்த்தோ (Berth) இருக்கையோ (Seat) ஒதுக்கப்பட மாட்டாது. உங்கள் குழந்தைக்கு தனி பெர்த் வேண்டும் என விரும்பினால் அந்தக் குழந்தைக்கு பெரியவர்களுக்கான முழுக் கட்டணம் வசூலிக்கப்படும். மேலும் 5 வயது முதல் 12 வயதுடைய உங்கள் குழந்தைக்கு பெர்த் வேண்டாம் என்றால் ரயிலில் பயணிக்க பாதிக் கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும். அதே வேளையில் 5 வயது முதல் 12 வயதுடைய உங்கள் குழந்தைக்கு பெர்த் வேண்டும் என்றால் பெரியவர்களுக்கான முழு கட்டணத்தை நீங்கள் செலுத்த வேண்டும்.
குழந்தைகளுக்கான சலுகை கட்டணம் எக்ஸ்பிரஸ், சூப்பர் பாஸ்ட் என ரயில்களின் வகைகளை பொறுத்தும், ஸ்லீப்பர் கோச், ஏசி கோச் என பெட்டிகளின் வகைகளை பொறுத்தும் மாறுபடும். இதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். ரயிலில் குழந்தைகளுக்கு 12 வயது வரை மட்டுமே மேற்கண்ட சலுகைகள் கிடைக்கும். 12 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் ரயிலில் முழு கட்டணமே வசூலிக்கப்படும். கொரோனாவுக்கு முன்பு வரை ரயிலில் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு (Senior Citizen) டிக்கெட் கட்டண சலுகை இருந்து வந்தது. கொரோனாவின்போது நிதி நிலைமையை காரணம் காட்டி இந்த சலுகை நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.























