சென்னை டூ குலசேகரப்பட்டினம்! SETC-ல் செல்வது வொர்த்தா இல்லையா? முழு ரிவ்யூ
Chennai to Kulasekarapattinam: சென்னையில் இருந்து குலசேகரன்பட்டினம் செல்வதற்காக உடன்குடி வரை செல்லும் அரசு விரைவுப் பேருந்தில் நான்கு இருக்கைகள் முன்பதிவு செய்தோம்.

சென்னையின் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் (KCBT) தொடங்கி, தென் தமிழகத்தின் ஆன்மீகக் கடற்கரை நகரமான குலசேகரன்பட்டினம் வரை நீண்ட ஒரு பயணத்தை அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் (SETC) பேருந்து மூலம் மேற்கொண்டோம். இந்த நீண்ட தூரப் பயணத்தில் பேருந்தின் பராமரிப்பு, வேகம் மற்றும் நேர மேலாண்மை குறித்த நேரடி அனுபவங்களின் தொகுப்பை கீழே காண்போம்.
25 நிமிடங்கள் தாமதம்:
சென்னையில் இருந்து குலசேகரன்பட்டினம் செல்வதற்காக உடன்குடி வரை செல்லும் அரசு விரைவுப் பேருந்தில் நான்கு இருக்கைகள் முன்பதிவு செய்தோம். முன்பதிவு செய்த அனைத்துப் பயணிகளும் வந்து பேருந்து புறப்பட 25 நிமிடங்கள் கூடுதலாக ஆனது.

பேருந்து பராமரிப்பும் வசதிகளும்
பேருந்தின் வெளிப்பகுதியில் சில ஒட்டு வேலைகள் (Patch works) தென்பட்டாலும், உட்புறம் மிகவும் நேர்த்தியாகவும், சுத்தமாகவும் பராமரிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக என்ஜினின் இழுவைத் திறன் அபாரமாக இருந்தது; அதிகபட்ச வேகத்திலும் எவ்வித இரைச்சலும் இன்றி பயணம் நிதானமாக அமைந்தது. ஆனால் 75 கி. மீ / மணியில் வேகக்கட்டுப்பாடு கருவி பொருத்தப்பட்டுள்ளது. இவ்வளவு தொலைவு செல்லும் இந்தப் பேருந்துக்கு 80 கி. மீ / மணி வேகம் கூட கொடுக்காதது ஏற்றுக் கொள்ளும் படி இல்லை.

ஓட்டுநர் மற்றும் நடத்துநர் ( DCC ) இருவருமே அந்தளவுக்கு நட்பாக பழகவில்லை என்றாலும் அதே சமயத்தில் பயணிகளிடம் கடுமையாகவும் நடந்துக் கொள்ளவில்லை. திருச்செந்தூரில் அனைத்துப் பயணிகளும் இறங்கியப் பிறகு பேருந்தில் நாங்கள் மூவர் மட்டுமே இருந்தோம். வழக்கமாக உடன்குடி சென்று, குலசை வரும் பேருந்து, எங்களுக்காக நேரடியாக குலசை வந்தடைந்தது. இறங்கும் போது இருவரிடமும் நன்றி கூறிவிட்டு இறங்கினோம்.
வேகக்கட்டுப்பாடும் பயண நேரமும்
ஓட்டுநர் வாய்ப்புள்ள அனைத்து இடங்களிலும் 70 - 75 கி. மீ / மணிக்கு குறையாமல் பேருந்தை இயக்கினார். DCC - யின் இயக்கம் இவரிடம் இருந்து சற்று வேறுபட்டிருந்தது. DCC அனைத்து இடங்களிலும் அதிகபட்ச வேகத்திலேயே பேருந்தை இயக்கினார். வேகக்கட்டுப்பாடு ஒரு 85 கி. மீ / மணியில் இருந்திருந்தால் பயண நேரம் 45 நிமிடங்கள் நிச்சயம் குறைந்திருக்கும். பேருந்தானது விழுப்புரம் மற்றும் மதுரை மட்டுமே உள் சென்று வந்தது. வேறு எங்கேயும் பேருந்து போகவில்லை. டீசல் நிரப்புவதற்காக தூத்துக்குடி SETC பணிமனையில் 10 நிமிடங்கள் நேர விரயமானது.
| இடம் | நேரம் |
| கிளாம்பாக்கம் புறப்பாடு (KCBT Exit) | 04:55 PM |
| பரனூர் டோல்கேட் | 05:40 PM |
| ஆத்தூர் டோல்கேட் | 06:55 PM |
| விக்கிரவாண்டி டோல்கேட் | 07:40 PM |
| விழுப்புரம் (NBS) | 08:02 PM - 08:10 PM |
| இரவு உணவு இடைவேளை (Dinner) | 08:45 PM - 09:13 PM |
| சமயபுரம் டோல்கேட் | 11:05 PM - |
| பூதக்குடி டோல்கேட் | 11:52 PM |
| சிட்டம்பட்டி டோல்கேட் | 01:18 AM |
| மதுரை மாட்டுத்தாவணி | 01:35 AM - 01:40 AM |
| தூத்துக்குடி (NBS) | 04:40 AM |
| திருச்செந்தூர் | 05:50 AM |
| குலசேகரன்பட்டினம் (வந்தடைந்தது) | 06:20 AM |
13 மணி நேரம் சற்று அதிகம் என்றாலும், வேகக்கட்டுப்பாட்டால் இது ஏற்றுக் கொள்ளக் கூடியவொன்று தான். ஏனெனில் பேருந்து விழுப்புரத்திற்கு பிறகு முழு வேகத்திலேயே இயங்கியது. ஒட்டுமொத்தமாக இது ஒரு சிறப்பான மற்றும் மனநிறைவான பயணமாக அமைந்தது.
























