வீட்டிற்கு ஒரு தொலைக்காட்சி என்ற காலமெல்லாம் மலையேறி போக, இப்போது ஆளுக்கு ஒரு ஸ்மார்ட்போன் என நிலைமை மாறியுள்ளது. அதில், சென்னையின் அண்ணாசாலையில் இருந்து அண்டார்டிகா வரையில் நடக்கும் அனைத்து சம்பவங்களையும், கையடக்கத்தில் கண்முன் காட்டுகிறது யூடியூப். இதனால், தான், சமூக வலைதள கணக்குகள் இல்லாத நபர்களை கூட பார்க்க முடிகிறது. ஆனால் யூடியூப்பை பயன்படுத்தாத நபர்களை பார்ப்பது என்பது அரிதாக மாறியுள்ளது. தனிநபருக்கான தொலைக்காட்சி எனும் வகையில் உலக அளவில், யூடியூப் பயன்பாடு பெரும் வளர்ச்சி கண்டுள்ளது. பார்வையாளர்களின் பொழுதுபோக்கு என்பதை தாண்டி, பலரின் வாழ்வாதாரமாகவும் யூடியூப் மாறியுள்ளது. இதற்காகவே தனக்கென சட்ட, திட்டங்களை வகுத்து, தங்களது தளத்தில் வீடியோ பதிவு செய்பவர்களுக்கு என பல கட்டுப்பாடுகளையும் யூ-டியூப் நிறுவனம் விதித்துள்ளது. இந்நிலையில் தான், யூடியூப்பில் ஷார்ட்ஸ் வீடியோ பகிரும் நபர்களுக்கும் பணம் வழங்க, யூடியூப்பின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் முடிவு செய்துள்ளது.
ஷார்ட்ஸ் வீடியோ:
புதிய திட்டம் மூலம் ஷார்ட்ஸ் பகுதியில் வீடியோக்களுக்கு இடையே பார்க்கும் விளம்பரங்களில் இருந்து பணம் சம்பாதிக்க முடியும். 60 விநாடிகளில் ஒரு விஷயத்தை வீடியோவாக வெளிப்படுத்தும் போக்கை டிக் டாக் தொடங்கி வைத்து பெரியளவில் பார்வையாளர்களை கவர்ந்தது. அதை இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் என்ற பெயரிலும், யூடியூப் ஷார்ட்ஸ் என்ற பெயரிலும் தங்கள் தளங்களில் வழங்க தொடங்கின. டிக் டாக் செயலி தடை செய்யப்பட்டதை தொடர்ந்து, ரீல்ஸ் மற்றும் ஷார்ட்ஸ் சக்கைப்போடு போடுகிறது. காமெடியான குறு வீடியோக்கள், பாடல்கள், செல்லப் பிராணிகளின் சேட்டைகள், உணவுக் கடைகள், சமையல் குறிப்புகள், வயது வந்தோருக்கான ஜோக்குகள் என பல இதில் விரும்பிப் பார்க்கப்படுகின்றன
ஷார்ட்ஸ் மூலம் வருவாய்:
யூடியூப் நிறுவனம் இத்தகைய ஷார்ட் வீடியோக்களுக்கு என ஒரு நிதியை ஒதுக்கி வந்தது. ஆனாலும் பெரிதாக ஷார்ட் வீடியோக்களுக்கு பணம் கிடைத்ததில்லை. இந்நிலையில் தான், வரும் பிப்ரவரி 1ம் தேதியிலிருந்து வருவாய் பகிர்வுத் திட்டம் அமலுக்கு வர உள்ளது. அதன்படி, தங்கள் ஷார்ட் வீடியோக்களை பணமாக்க நினைப்பவர்கள், ஆயிரம் சந்தாதாரர்களை பெற்றிருக்க வேண்டும் மற்றும் அவர்களது ஷார்ட் வீடியோக்கள் 90 நாட்களில் 1 கோடி பார்வைகளை பெற்றிருக்க வேண்டும். இத்தகுதியை பூர்த்தி செய்யும் கிரியேட்டர்கள் இந்த பணமாக்கல் திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருவாய் பகிர்வு:
ஷார்ட் வீடியோ பீட்களுக்கு இடையே வரும் விளம்பரத்தை எத்தனை பேர் பார்க்கிறார்களோ அதனைப் பொறுத்து பணம் கிடைக்கும். ஷார்ட் வீடியோக்களில் இசையை பயன்படுத்தியிருந்தால், எத்தனை டிராக் உள்ளதோ, அந்தந்த மியூசிக் பார்டனர்களுக்கும் தொகை பிரித்து அளிக்கப்படும். மியூசிக் இல்லாமல் சொந்த ஆடியோ எனில் தொகை முழுவதுமாக வீடியோ கிரியேட்டர்களுக்கு கிடைக்கும் என ஆல்பாபெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.