டிஜிட்டல் உலகில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருமானம் ஈட்ட நினைக்கும் புதிய படைப்பாளர்களுக்கு யூடியூப் நிறுவனம் பேரதிர்ச்சி அளிக்கும் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. புதிதாகத் தொடங்கப்படும் யூடியூப் சேனல்கள் மூலம் வருவாய் ஈட்டுவதற்கான (Monetization) தகுதி வரம்புகளை இரட்டிப்பாக்கி, நிபந்தனைகளை யூடியூப் தற்பொழுது வெகுவாகக் கடினமாக்கியுள்ளது.

Continues below advertisement

கடினமாக்கப்பட்ட புதிய தகுதி வரம்புகள்

இதுவரை நடைமுறையில் இருந்த விதிகளின்படி, ஒரு யூடியூப் சேனல் பணமீட்டும் தகுதியைப் பெற 1,000 சந்தாதாரர்களுடன் (Subscribers) கடந்த 12 மாதங்களில் 4,000 வாட்ச் ஹவர்ஸ்களைப் (Watch Hours) பெற்றிருக்க வேண்டும் அல்லது 90 நாட்களில் 10 மில்லியன் ஷார்ட்ஸ் பார்வைகளை (Shorts Views) எட்டியிருக்க வேண்டும். ஆனால், புதிய அறிவிப்பின்படி இந்த நிபந்தனைகள் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளன. இனி புதிய சேனல்கள் பணமீட்ட வேண்டுமெனில், கடந்த 12 மாதங்களில் 8,000 தகுதியான வாட்ச் ஹவர்ஸ்களைப் பூர்த்தி செய்ய வேண்டும் அல்லது கடந்த 90 நாட்களில் 20 மில்லியன் தகுதியான ஷார்ட்ஸ் பார்வைகளைப் பெற்றிருக்க வேண்டும். 1,000 சந்தாதாரர்கள் என்ற அடிப்படை நிபந்தனையில் மாற்றமில்லாவிட்டாலும், வாட்ச் ஹவர்ஸ் மற்றும் ஷார்ட்ஸ் பார்வைகளின் இலக்குகள் இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளன.

எப்போது முதல் அமலுக்கு வருகிறது?

யூடியூப் நிறுவனத்தின் இந்த அதிரடி மாற்றங்கள் உடனடியாக நடைமுறைக்கு வரவில்லை என்றாலும், இதற்கான காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய தகுதி வரம்புகள் அனைத்தும் 2027-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி (01-02-2027) முதல் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், புதிதாகச் சேனல் தொடங்கித் தங்களின் வாழ்வாதாரத்தை உருவாக்க நினைக்கும் பல இளம் கிரியேட்டர்கள் மற்றும் பகுதிநேரப் படைப்பாளர்களுக்கு இந்த அறிவிப்பு மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது.

Continues below advertisement