தொழில்நுட்ப வளர்ச்சிக்கான சிறந்த உதாரணம் ரோபோக்கள்தான்.  சந்தையில, நாள்தோறும் வித்தியாசமான செயல் திறன் கொண்ட ரோபோக்கள் காட்சிப்படுத்தப்படுகிறது. அவற்றுள் சில பயன்பாட்டிற்கும் வர தொடங்கிவிட்டன. அந்த வகையில் சிங்கப்பூரில் புதிய ரோபோ ஒன்று மக்கள் நடமாடும் பகுதிகளுக்குள் களமிறக்கிவிடப்பட்டிருக்கிறது. சேவியர் என பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த ரோபோவானது, பொது இடங்களில் சட்ட விதிளுக்கு உட்படாமல் அதனை  மீறும் நபர்களுக்கு எச்சரிக்கை கொடுப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. உதாரணமாக பொது இடங்களில் புகைப்பிடிக்க கூடாது என்பது இந்தியா , சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளில் சட்டம் வகுக்கப்பட்டுள்ளது. ஆனால் அதனை பெரும்பாலோர் பின்பன்றுவதே கிடையாது.இதனை கருத்தில் கொண்டுதான் சேவியர் ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது. கீழ்கண்ட வீடியோவில் நபர் ஒருவர் பொது இடத்தில் புகைப்பிடிக்கிறார். ஆனால் அதனை கண்ட சேவியர் ரோபோ அந்த நபர் அருகில் வந்து “நீங்கள் அனுமதி மறுக்கப்பட்ட பகுதியில் வந்து புகைப்பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள் இது தவறு ” என எச்சரிக்கை விடுக்கிறது. உடனே அந்த நபர் அங்கிருந்து நகர்ந்து செல்கிறார். இது சோதனைக்காக எடுக்கப்பட்ட வீடியோதான் என்றாலும், சேவியர் ரோபோவின் வேலை இதுதான்.



 


சரி எச்சரிக்கை மட்டுமே செய்யும் இந்த ரோபோ தண்டனையா கொடுத்துவிட போகிறது, இல்லை கைதுதான் செய்துவிடுமா என அலட்சியமாக இருந்துவிட முடியாது. ஏனென்றால் யார் ஒருவர் சட்ட விதிகளுக்கு புறம்பாக நடக்கிறார்களோ அவர்களை வீடியோ எடுத்து கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பி விட்டுதான் எச்சரிக்கையே விடுக்கும். அதனால் ரோபோவை அலட்சியம் செய்துவிட்டு ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது. சட்ட விதிகளை மீறும் நபர்களை சில வினாடிகளிலேயே அடையாளம் கண்டுக்கொள்ளும் படியான அட்வான்ஸ்ட் புரோகிராம் செய்யப்பட்டுள்ளது. மேலும் 360 டிகிரி கோணத்தில் செயல்படும் கேமராக்களை கண்களாக கொண்டுள்ளது சேவியர் ரோபோ. இது இருட்டிலும் தெளிவான காட்சிகளை படமாக்குமாம். அதே போல பொது இடத்தில் புகைப்படிக்க தடை உள்ளிட்ட  அரசு விதிகள் தொடர்பான அறிவுறுத்தல்களை தொடர்ந்து மக்களுக்கு வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.




ஞாயிற்றுக்கிழமை இந்த ரோபோவுக்கான சோதனை ஓட்டம்   சிங்கப்பூரின் முக்கிய பகுதியான ’மத்திய டோ பயோ’  ( Toa Payoh Central) பகுதியில் நடைப்பெற்றது . அப்போது சட்ட விரோத விற்பனையாளர்கள், பொது இடத்தில் புகைப்பிடிக்கும் நபர்கள், நடைப்பாதையில் பைக் மற்றும் இ-ஸ்கூட்டரில் பயணித்த நபர்கள்,கொரோனா சமயங்களில் அனுமதிக்கப்பட்ட  எண்ணிக்கையை தவிர்த்து அதிக அளவில் கூடும் கூட்டங்கள் தொடர்பான தகவல்களை திரட்டியுள்ளது. பொது சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ள சேவியர் ரோபோவை  அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சிக்கான ஏஜென்சியுடன் இணைந்து எச்.டி.எக்ஸ் (HTX) என்ற நிறுவனம் உருவாக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.