X Twitter Chat: ட்விட்டர் செயலியில் மேம்படுத்தப்பட்ட சாட் வசதியானது முதற்கட்டமாக, ஐபோன் மற்றும் வெப் பிரிவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ட்விட்டர் சாட் ஆப்ஷன் அப்க்ரேட்
எக்ஸ் அல்லது ட்விட்டர் செயலியில் விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என, நீண்டகாலமாக விவாதிக்கப்பட்டு வந்த வசதி தற்போது சோதனை முயற்சியாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போதுள்ள நேரடியாக குறுந்தகவலை (Direct Message) அனுப்பு வசதியானது சாட் (Chat) அம்சமாக மாற்றப்படுகிறது. இந்த அப்க்ரேட் மூலம் பிரதான குறுந்தகவல் பரிமாற்ற செயலிகளை போலவே பல வசதிகள் எக்ஸ் அல்லது ட்விட்டர் செயலியில் இணைக்கப்படுகிறது.
புதிய வசதிகள் என்ன?
அதில் வாய்ஸ் மற்றும் வீடியோ கால்ஸ், ஆவணங்களை பகிர்ந்து கொள்வது, அனுப்பிய குறுந்தகவலை எடிட் செய்வது மற்றும் டெலிட் செய்வது போன்ற அம்சங்களும் அடங்கும். பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் எண்ட் டு எண்ட் என்க்ரிப்ஷன் வழங்கப்படுகிறது. அனுப்பிய குறுஞ்செய்தியை ஒருமுறை படித்த பிறகு அழிய செய்வது, ஸ்க்ரீன் ஷாட் எடுக்கப்படுவதை தடுப்பது, யாரேனும் ஸ்க்ரீன் ஷாட் எடுக்க முடிந்தால் அது தொடர்பாக நோடிஃபிகேஷன் பெறுவது போன்ற அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன.
விரைவில் ஆண்ட்ராய்டில் அறிமுகம்:
சோதனை முயற்சியாகவும், முதற்கட்டமாகவும் அப்க்ரேட் செய்யப்பட்ட சாட் வசதியானது, iOS மற்றும் வெப் எக்ஸ் அல்லது ட்விட்டர் பயனர்களுக்கு மட்டும் இந்த அம்சங்கள் தற்போது வழங்கப்பட்டுள்ளது. விரைவில் ட்விட்டர் செயலியிலும் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளதாம். ஆடியோ குறுந்தகவல்களை அனுப்புவதற்கான சோதனைகளும் நடைபெற்று வருவதாகவும், விரைவில் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் வாட்ஸ்-அப்பில் இருப்பதை போன்றே நண்பர்களையோ அல்லது சக ஊழியர்களையோ சேர்த்து குழுக்களையும் உருவாக்கி, பாதுகாப்பாக கலந்துரையாட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் இந்த அம்சம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு உள்ளதாகவும், விரைவில் இந்தியாவிலும் அறிமுகப்படுத்தப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரச்னை தீர்ந்ததா?
குறுஞ்செய்திகளை அனுப்புவதற்கான இந்த அம்சமானது ஏற்கனவே கடந்த மே மாதத்தில் எக்ஸ் அல்லது ட்விட்டர் பக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், அதில் ஏற்பட்ட சில சிக்கல்கள் காரணமாக தற்காலிகமாக இந்த வசதி நிறுத்தப்பட்டது. இந்நிலையில் வெளியாகியுள்ள இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பானது, முன்பு இருந்த பிரச்னைகள் நிவர்த்தி செய்யப்பட்டதை உணர்த்துகிறது.