ஐஃபோன் 12 ப்ரோ மாடல் 2020ம் ஆண்டு சந்தையில் வெளியான போது அதன் சந்தை மதிப்பு 1,59,990 ரூபாய். அதுவரை எந்த ஒரு போனும் அந்த விலைக்கு விற்கப்படவில்லை. சராசரியாகவே ஐபோனின் விலை தாறுமாறாகவே இருந்தாலும் இந்த மாடலின் விலை ஐபோன் பிரியர்கள் அனைவரையும் அட என அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சாதாரண தண்ணீர் பாட்டிலைக் கூடத் தனது பிராண்டிங் வழியாகக் கோடிக்கணக்கான விலைக்கு விற்கும் திறன் ஆப்பிள் நிறுவனத்துக்கு உண்டு.
ஐஃபோன் இப்படி இமாலய விலைக்கு விற்கப்படக் காரணம் என்ன?
ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளில் ஒன்றுதான் ஐஃபோன். அவர்கள் முதன்முதலில் அறிமுகப்படுத்தியது கம்புயூட்டர், அதன்பிறகு லேப்டாப், ஐபாட் ஆகிய கருவிகளின் வரிசையில் ஐபோன் இடம்பெற்றது. ஆப்பிள் நிறுவனம் மற்ற போன் மாடல்களில் இயங்கும் ஆண்ட்ராய்ட் போல அல்லாமல் ஐஓஎஸ் என்னும் ஒருவகை சாப்ட்வேரை உபயோகிக்கிறார்கள். இது அந்த போன் ஹேக் செய்யப்படுவதில் இருந்து பல சைபர் கிரைம் குற்றங்களால் பாதிக்கப்படுவது வரை எந்த சம்பவமும் நேராமல் பாதுகாக்கிறது. ஐபாட் என்னும் தனிப்பட்ட வகை இசை கேட்கும் கருவி சந்தையில் அறிமுகமானபோது கையடக்கத்தில் ஆயிரம் பாடல்கள் என்பது அனைவருக்குமே பெரிய அளவிலான கிப்ட்டாக இருந்தது.
ஆனால் அந்தக் கருவியைத் தயாரிப்பதையே நிறுத்திவிட்டுதான் ஐட்யூன்ஸ், க்ளவுட் என முழுக்க முழுக்க அத்தனையுமே கையடக்க ஐபோனில் கிடைக்கும்படி செய்தார்கள். தங்களது ப்ராடக்டை தாங்களே அழிக்கும் வழக்கம் ஆப்பிள் நிறுவனத்துக்கு உண்டு. தாங்கள் அதை அழித்து வளரவில்லை என்றால் பிற நிறுவனம் முந்திக்கொள்வார்கள் என்கிற பார்வை அவர்களுக்கு. ஆப்பிள் நிறுவனம் யாரும் போட்டிபோட முடியாத அளவுக்கு வளர்ந்த பின்னணி இதுதான். இதுபோன்ற தனிப்பட்ட அம்சங்கள்தான் அதன் கருவிகளின் விலையை நிர்ணயிக்கின்றன.