இந்தியாவில் இன்று முதல் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் அமல்படுத்தப்பட உள்ளது. இந்த விதிகளை வாட்ஸ் அப், ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்டவை இதுவரை ஏற்றுக் கொள்ளவில்லை. இந்த விதிகளின்படி வாட்ஸ் அப் தளத்தில் யார் முதலில் ஒரு சர்ச்சைக்குரிய தகவலை பகிர்ந்தார் என்று அரசுக்கு தெரிவிக்க வேண்டும். இந்த விதியை வாட்ஸ் அப் நிறுவனம் ஏற்க மறுத்தது. ஏனென்றால் அதன் தனி மனித தரவு பாதுகாப்பு கொள்கைக்கு இந்த விதி மாறாக உள்ளது என்று வாட்ஸ் அப் எதிர்த்துள்ளது.
இந்நிலையில் இந்த புதிய விதிகள் தொடர்பாக வாட்ஸ் அப் தளம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாக 'ராய்ட்டர்ஸ்' செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி இந்தியாவின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் தனிமனித உரிமைக்கு எதிராக உள்ளது என்று வாட்ஸ் அப் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அரசு கேட்கும் போது ஒரு தகவலை யார் முதலில் பகிர்ந்தார் என்பதை வாட்ஸ் அப் நிறுவனம் அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்று உள்ளது. இதுவும் எங்களுடைய தனிமனித தரவு பாதுகாப்பிற்கு மிகவும் எதிரானது என வாட்ஸ் அப் தெரிவித்துள்ளது.
இந்த புதிய விதிகளின்படி சர்ச்சைக்குரிய பதிவுகளை யார் முதலில் பகிர்ந்தார் என்று மட்டுமே அரசு கேட்கும் போது தெரிவிக்க வேண்டும் என்று உள்ளது. ஆனால் வாட்ஸ் அப் தரவு பாதுகாப்பு கொள்கையின் படி அதை செய்வது மிகவும் கடினமான ஒன்று. எனவே விதிகளை பின்பற்ற வேண்டும் என்றால் என்கிரிப்ஷன் (குறியாக்கம்) வாட்ஸ் அப் உடைக்க வேண்டும். அதாவது தனிப்பட்டவர்களின் தகவல்களை கண்காணிக்க வேண்டும். இதற்கு அந்த நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும் இந்த வழக்கில் 2017ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் புட்டாசாமி வழக்கில் அளித்த தனியுரிமை அடிப்படை உரிமைகளில் ஒன்று என்பதையும் வாட்ஸ் அப் நிறுவனம் வழக்கில் சுட்டிக்காட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக இந்த விதிகள் கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. இதை அமல்படுத்த அரசு 90 நாட்கள் அவகாசம் அளித்தது. அதன்படி மே 25ஆம் தேதி வரை இதை ஏற்க சமூக வலைத்தளங்களுக்கு அவகாசம் அளிக்கப்பட்டது. இந்த விதிகளை இந்தியாவில் 50 லட்சம் பயனாளர்களுக்கு மேல் உள்ள சமூக வலைத்தளங்கள் நிச்சயம் ஏற்க வேண்டும். அத்துடன் இந்தியாவில் ஒரு இந்திய அதிகாரியை புகார்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க அமைக்க வேண்டும். அத்துடன் அரசு சட்டப்படி நீக்க கோரிக்கை விடுக்கும் பதிவுகளை 36 மணி நேரத்திற்குள் இவை நீக்க வேண்டும். அத்துடன் அரசு புகார்கள் தொடர்பாக எளிதாக சமூக வலைத்தளங்களை அணுக ஒரு குழு மற்றும் நெறிமுறைகளை இந்த நிறுவனங்கள் அமைக்க வேண்டும். இந்தப் புதிய விதிகள் அதிக கட்டுப்பாடு உடையதாக உள்ளதாக பல தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இவை அரசிற்கு அதிகளவில் அதிகாரம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும் அவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.