புதிய அம்சமாக டெஸ்க்டாப்பிற்க்கு என பிரத்யேக வாட்ஸ்-அப் செயலியை மெட்டா குழுமம் அறிமுகப்படுத்தியுள்ளது.


மெட்டா நிறுவனம்:


மெட்டா குழுமத்திற்கு சொந்தமான வாட்ஸ்-அப் செயலி, உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனாளர்களை கொண்டுள்ளது.  அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவும், செயலியை தொடர்ந்து மேம்படுத்தும் நோக்கிலும் அந்நிறுவனம் தொடர்ந்து அப்டேட்களை வாரி வழங்கி வருகிறது. இதுவரை ஆண்ட்ராய்ட் மற்றும் ஐஓஎஸ் பயனாளர்களுக்கான வாட்ஸ்-அப் செயலி சேவைகளை வழங்கி வந்த மெட்டா நிறுவனம், டெஸ்க்-டாப் பயனாளர்களுக்கும் தனது சேவையை தற்போது விரிவுபடுத்தி அறிமுகப்படுத்தியுள்ளது.


டெஸ்க்-டாப்பிற்கு வாட்ஸ்-அப் செயலி:


இதுதொடர்பாக மெட்டா குழுமத்தின் நிறுவனர் மார்க் ஜுகர்பெர்க் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ”விண்டோஸ்-கான புதிய வாட்ஸ்-அப் செயலியை அறிமுகப்படுத்துகிறோம். இது விரைவாக செயல்படும். இந்த செயலியும் மொபைல் பதிப்பைப் போன்றே கட்டமைக்கப்பட்டுள்ளது. இதில் எண்ட் டு எண்ட் என்கிரிப்டட் செய்யப்பட்ட அம்சத்துடன் ஒரேநேரத்தில் 8 பேருடன் வீடியோ காலையும்,  32 பேருடன் ஆடியோ காலையும் மேற்கொள்ள முடியும்” என குறிப்பிட்டுள்ளார். அதோடு, ”தற்போது வழங்கப்பட்டுள்ள வரம்புகள் காலப்போக்கில் தொடர்ந்து அதிகரிக்கப்படும். இதன் மூலம் நீங்கள் எப்போதும் நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் சக பணியாளர்களுடன் தொடர்பில் இருக்க முடியும்” என மெட்டா நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எண்ட் டு எண்ட் என்கிரிப்ஷன்:


விண்டோஸிற்கான டெஸ்க்டாப் வாட்ஸ்-அப் செயலி, மெட்டா நிறுவனத்தின் பிற பயன்பாடுகளைப் போன்றே அதாவது மொபைல் போன்கள், கணினிகள் மற்றும் டேப்லெட்டுகள் உள்ளிட்ட பல சாதனங்களில் செய்தி அனுப்புதல், மீடியா மற்றும் அழைப்புகளுக்கு வழங்கப்பட்டதை போன்ற எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் அம்சத்தை பெற்றுள்ளது.


வாட்ஸ்-அப் செயலியில் அடுத்து என்ன?


வாட்ஸ்-அப் செயலியை பயன்படுத்தக்கூடிய வெவ்வேறு விதமான சாதனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஆண்ட்ராய்டு டேப்லெட்டுகளுக்கும் தற்போது பீட்டாவின் ஆரம்ப கட்டத்தில் இருக்கும் மேக் டெஸ்க்டாப்புகளுக்கும் புதிய வாட்ஸ்அப் பீட்டா அனுபவம் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் வாட்ஸ்-அப்பை இன்னும் பல சாதனங்களில் கொண்டுவர மெட்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.  


அட்மின்களுக்கு கூடுதல் அதிகாரம்:


புதிய அப்டேட்டின்படி, ஒரு குழுவில் யார் சேர முடியும் என்பதை தீர்மானிக்கும் திறன் அட்மின்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், உங்கள் தொடர்பில் இருக்கும் ஒருவரும், நீங்களும் எந்தெந்த வாட்ஸ்அப் குரூப்களில் ஒன்றாக இருக்கிறீர்கள். அது உங்களுக்கு தெரிந்தாலும் அல்லது நினைவில் இல்லையெனினும், நீங்கள் இருவரும் இருக்கும் பொதுவான குழுக்களைப் பார்க்க விரும்பினாலும் அதை எளிதாக செய்யலாம். அதன்படி, சர்ச் பாக்ஸில் சென்று குறிப்பிட்ட காண்டாக்டின் பெயரை தேடினாலே, நீங்கள் இருவரும் இடம்பெற்றுள்ள குழுக்களின் விவரங்களை அறியலாம். இந்த இரண்டு சேவைகளும் தற்போது உலகம் முழுவதும் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.