வாட்ஸ் - அப் செயலியில் வாய்ஸ்-நோட்டுக்கு மாற்றாக புதிய அப்டேட் (transcription feature) ஒன்று விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


வாட்ஸ்-அப் செயலி:


மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்-அப் செயலி, உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனாளர்களை கொண்டுள்ளது.  அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் நோக்கிலும், போட்டி செயலிகளிடம் வீழ்வதை தவிர்க்கும் வகையிலும், அதில் தொடர்ந்து பல்வேறு அப்டேட்கள் வழங்கப்பட்டு  வருகின்றன. குறுந்தகவலை பகிர்ந்து கொள்வதற்கான முதன்மை செயலியாக, வாட்ஸ்-அப் செயலி தொடர்ந்து நீடிப்பதற்கு மெட்டா நிறுவனம் வழங்கும், இந்த அடுத்தடுத்த அப்டேட்களும் முக்கிய காரணமாகும். அந்த வகையில் தான், வாடிக்கையாளர்களை கவரும் விதமாக அடுத்ததாக, புதிய அப்டேட் ஒன்றை வழங்க மெட்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.


வாய்ஸ் நோட்:


நீளமான குறுஞ்செய்திகளை தட்டச்சு செய்ய சிரமப்படும் பயனாளர்கள், குறிப்பிட்ட தகவலை பேசி வாய்ஸ்-நோட் ஆக ரிகர்ட் செய்து பகிரும் அம்சம் உள்ளது. ஆனால், அந்த நீளமான வாய்ஸ் நோட்டை கேட்க விரும்பாதவர்கள் உண்டு. அதோடு, ஹெட்-செட் இன்றி பொது இடங்களுக்கு சென்றபோது வாய்ஸ்-நோட்டை கேட்க முடியாமல் சிரமப்படுவதும், தனிப்பட்ட விவகாரங்கள் தொடர்பான வாய்ஸ் நோட்டை பொதுவெளியில் கேட்க முடியாத சூழலும் உண்டு. இந்த சிக்கல்களுக்கு தீர்வு காணும் ஒரு புதிய அப்டேட்டை தான் வாட்ஸ்-அப் செயலி விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. 


டிரான்ஸ்கிரிப்ஷன் அம்சம்:


வாய்ஸ் நோட்டை கேட்பதில் உள்ள சிக்கலை தீர்க்கும் வகையில், டிரான்ஸ்கிரிப்ஷன் எனும் புதிய அப்டேட்டை வாட்ஸ்-அப் செயலி வழங்க உள்ளது. இதன் மூலம் குறிப்பிட்ட வாய்ஸ்-நோட்டை மொத்தமாகவே டெக்ஸ்ட் அதாவது எழுத்துரையாக மாற்ற முடியும் என கூறப்படுகிறது. இந்த அப்டேட் தற்போது ஆராய்ச்சியில் இருப்பதகாவும், விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றும் கூறப்படுகிறது.


அண்மையில் வெளிவந்த அப்டேட்:


புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் கருத்துகளை போன்று, வாய்ஸ்-நோட்ஸ்-ஐயும் ஸ்டேட்டஸாக வைக்கும் புதிய அப்டேட் அண்மையில் வெளியானது.


செட்யூல் செய்வது எப்படி?


குரூப்பில் உள்ள நபர்களுக்கு செட்யூல் செய்து அழைப்பு மேற்கொள்ளும் வகையில் புதிய வசதியும் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்கு வாட்ஸ்-அப் செயலியில் கால் பட்டனை அழுத்தியதும் திரையில் ஒரு அட்டை தோன்றும். அதில், அழைப்புக்கான தலைப்பு, தேதி மற்றும் நேரம் ஆகியவற்றை பதிவிட்டு, கிரியேட் பட்டனை அழுத்த வேண்டும். அதைதொடர்ந்து, குரூப்பில் உள்ள நபர்களுக்கு அழைப்பு செட்யூல் செய்யப்பட்டது மற்றும் அழைப்பு தொடங்கியதற்கான நோட்டிபிகேஷன் தோன்றும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.  


கால் - ஷார்ட் கட்


முன்னதாக, எளிய முறையில் அழைப்பு மேற்கொள்ளும் வசதியும் வாட்ஸ்-அப் செயலியில் அறிமுகப்படுத்த மெட்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்கு, வாட்ஸ்-அப் செயலிக்குள் சென்று காண்டேக்ட்ஸ் பட்டியலை தேர்வு செய்து, அதில் குறிப்பிட்ட எண்ணை தொடுவதன் மூலம், அதற்கு ஷார்ட்-கட் வசதி ஏற்படுத்தப்படும். இதன் மூலம், பயனாளர் அடிக்கடி தொடர்புகொள்ளும் நபருக்கு, எளிய முறையில் அழைப்பு மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.