கடந்த செப்டம்பர் 30 அன்று, வாட்சாப் நிறுவனம் தனது சேட் கம்போசரில் இந்திய ரூபாய் பட்டனை இணைத்துள்ளதோடு, இந்தியாவின் பயனாளர்கள் பணப் பரிவர்த்தனைகளில் ஈடுபடுவதற்கான அம்சத்தையும் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளது. வாட்சாப் பயனாளர்களுக்கு இந்திய ரூபாய் பட்டனைச் சேர்க்கும் பணி தற்போது தொடங்கியுள்ளது. அடுத்தடுத்த வாரங்களில் இந்தியா முழுவதுமுள்ள பயனாளர்கள் அனைவருக்கும் இந்த அம்சம் பயன்படுத்தும் வண்ணம் சேர்க்கப்படும் என வாட்சாப் நிறுவனம் தெரிவித்துள்ளது. 


இதுகுறித்து கூறியுள்ள வாட்சாப் நிறுவனம், வாட்சாப் செயலியில் பணப் பரிவர்த்தனை செய்வது இதன் மூலம் எளிதாக மாற்றப்படுவதோடு, இந்தியர்கள் பெரும்பாலானோருக்குப் புரியும்படியிலான இந்திய ரூபாய் சின்னத்தை பட்டனாக வைத்ததோடு, அதனை வாட்சாப்பின் சேட் கம்போசரில் சேர்த்து, அனைவரும் பயன்படுத்தும் விதமாக மாற்றியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. 



`சுமார் 80 சதவிகிதத்திற்கும் மேலாக இந்தியாவில் பணப் பரிவர்த்தனை, பணமாக பரிமாற்றப்படுகிறது. இந்தியாவில் மூன்றில் இரண்டு பகுதிகள் இன்றும் கிராமப்புறமாக இருப்பதும், டிஜிட்டல் தளங்களில் ஏற்படும் மாற்றங்கள் அனைவரையும் சென்று சேர்வது அடுத்தடுத்த ஆண்டுகளில் நிகழும். `எப்படி பணம் செலுத்துவது’ என்பதற்கான மிக எளிதான வழிமுறைகளை இந்திய மக்கள் தெரிந்துகொள்ள சில தீர்வுகள் தேவை. மேலும் நகர்ப்புற, கிராமப்புற மக்கள் அனைவரும் இதனை நம்பிக்கையோடும், எளிமையாகவும் பயன்படுத்தும் விதமாக, மக்களால் அதிகம் நம்பப்படும் வாட்சாப் செயலி உதவும்’ என வாட்சாப் நிறுவனத்தின் இந்தியப் பிரிவின் பணப் பரிவர்த்தனைகளுக்கான இயக்குநர் மஹேஷ் மஹாத்மே தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.  


மேலும், வாட்சாப் புதிதாக சேர்த்துள்ள இந்த அம்சத்தோடு, மற்றொரு அம்சமாக கேமரா மூலமாக QR கோட் ஸ்கேன் செய்து, இந்தியாவிலுள்ள சுமார் 2 கோடிக்கும் மேலான எண்ணிக்கையில் உள்ள கடைகளில் பணம் செலுத்தும் வசதியைச் சேர்த்துள்ளது. இந்தியப் பயனாளர்களுக்காக `கேஷ்பேக்’ என்ற மற்றொரு புதிய சிறப்பம்சத்தை அறிமுகப்படுத்தும் பணியிலும் வாட்சாப் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. 



புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள `கேஷ்பேக்’ சிறப்பம்சத்தின்படி, வாட்சாப் செயலி மூலம் பணப் பரிவர்த்தனைகளில் ஈடுபடும் பயனாளர்களுக்கு 48 மணி நேரங்களுக்குப் பிறகு, அவர் செலுத்திய பணம் அவருக்கே மீண்டும் திரும்ப அனுப்பப்படும். இந்தியப் பயனாளர்களிடையே வாட்சாப் பணப் பரிவர்த்தனையைப் பிரபலமாக்குவதற்காக இந்தப் புதிய சிறப்பம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பம்சத்தின் மூலம், வாட்சாப்பில் பணப் பரிவர்த்தனையில் இதுவரை ஈடுபடாத புதிய பயனாளர்களுக்கு மட்டும் கேஷ்பேக் அம்சம் வழங்கப்படுமா, அல்லது அனைவருக்கும் இது பொருந்துமா என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. கேஷ்பேக் சிறப்பம்சம் அறிமுகப்படுத்தப்பட்டவுடன் வாட்சாப் நிறுவனத்தின் தரப்பில் இருந்து இதுகுறித்து அதிகாரப்பூர்வத் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.