வாட்ஸ்-அப் செயலி:
வாட்ஸ்-அப் இந்தியாவின் மிகப்பெரிய பயனர் எண்ணிக்கையை கொண்ட பரவலான செயலி. பல நாடுகளை காட்டிலும் இந்தியாதான் இதனை அதிகம் பயன்படுத்துகிறது. குறுஞ்செய்திகளை அனுப்பும் எளிய செயலிதான் என்றாலும், அந்த எளிமைதான் இந்த செயலியின் முதலீடாகவும் உள்ளது. எளிதாக யாருக்கும் தொந்தரவு இல்லாத வகையில் டெக்ஸ்ட் மெசேஜ், வாய்ஸ் மெசேஜ் செய்ய முடிந்த இந்த செயலியில் புகைப்படங்கள், வீடியோக்களும் எளிதாக அனுப்ப முடியும் என்பதால் டெக்னாலஜியை புதிதாக பயன்படுத்துபவர்கள் கூட விரைவில் புரிந்துகொண்டு இந்த செயலியை பயன்படுத்த விரும்புகின்றனர்.
மெட்டா நிறுவனம், இந்த செயலியை பயன்படுத்துவதில் பயனர்களை திருப்தி அடைவதையே முழு நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. அதனால் அவ்வப்போது பயனர்களுக்கு இலகுவான விஷயங்களை அப்டேட் செய்து, செயலியை மென்மேலும் மெருகேற்றுவதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அந்த வகையில் தற்போது, வாட்ஸ்-அப் கணக்கை மற்றொரு சாதனத்தில் பயன்படுத்துவதை பாதுகாப்பானதாக மாற்ற புதிய அப்டேட் ஒன்றை மெட்டா நிறுவனம் உருவாக்கி வருகிறது.
வெரிஃபிகேஷன் கோட் அம்சம்:
லிங்க்ட்- டிவைஸ் அம்சத்தின் மூலம், பயனாளர் தற்போது தனது வாட்ஸ்-அப் கணக்கை கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப் போன்ற சாதனங்களில் பயன்படுத்திக்கொள்ளலாம். இதுவரை அதற்கு எந்தவித கட்டுப்பாடுகளோ, விதிமுறைகளோ இல்லாமல் இருந்தது. இந்நிலையில் தான் லிங்க்ட் - டிவைஸ் வசதியை பயன்படுத்த, வெரிஃபிகேஷன் கோட் எனும் புதிய வசதியை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த வகையில் இனி கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்பில் வாட்ஸ்-அப் கணக்கு இணைக்கப்பட்டால், முதன்மை டிவைஸ் ஆன பயனாளரின் செல்போனில் உள்ள வாட்ஸ்-அப் செயலியின் முகப்பு பக்கத்தில் வெரிபிகேஷன் கோட் தோன்றும். மற்ற சாதனத்தில் பயன்படுத்திவிட்டு ஒருவேளை லாக்-அவுட் செய்ய மறந்துவிட்டால், வேறு யாரேனும் பயனாளரின் வாட்ஸ்-அப் கணக்கை அணுகினாலும் உடனடியாக அவரது வாட்ஸ்-அப் செயலியில் வெரிஃபிகேஷன் கோட் தோன்றும். உடனடியாக தனது கணக்கை அவர் லக்-அவுட் செய்யலாம். இதன் மூலம் பயனாளரின் தனிமனித தரவுகள் திருடப்படுவது தடுக்கப்படும் என கூறப்படுகிறது. தற்போது பீட்டா வெர்ஷனில் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் சோதனை முறையில் இந்த அம்சம் வழங்கப்பட்டுள்ளது. விரைவில் மற்ற பயனாளர்களுக்கும் இந்த புதிய அப்டேட் கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அண்மையில் வழங்கப்பட்ட அப்டேட்:
அவதார் என்ற ஆப்ஷன் மூலம், பயனர்கள் தங்களுக்கான அவதாரங்களை உருவாக்கி அதைத் தங்கள் டிபி-யாக அமைக்க முடியும். இந்த அம்சம் சமீபத்திய iOS மற்றும் Android புதுப்பிப்புகளுடன் சமீபத்தில் வெளியிடப்பட்டது. மேலும் வாட்ஸ்-அப் தற்போது ஆண்ட்ராய்டு பயனர்களுக்காக 21 புதிய எமோஜிக்களை அறிமுகம் செய்துள்ளது. ஒருமுறை மட்டுமர் படிக்கக்கூடிய செய்தியும் தற்போது அனுப்ப முடியும். ஒருமுறை அந்த செய்தியைப் பெறுபவர் அதைப் படித்த பிறகு சாட்டில் இருந்து மறைந்துவிடும். ஸ்க்ரீன்ஷாட்டும் எடுக்க முடியாது.