மெட்டா குழுமம் வாட்ஸ் - அப் பயனாளர்களுக்கு போல் உருவாக்குவதிலும் மற்றும் டாகுமெண்ட் அனுப்புவதிலும், புதிய அப்டேட்களை வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாட்ஸ் - அப் செயலி:
எளிய முறையில் தகவல்களை பரிமாற்றம் செய்து கொள்வதில் உலக அளவில் பெரும் புரட்சியை செய்துள்ளது வாட்ஸ்-அப் செயலி. பிளே-ஸ்டோரிலிருந்து 500 கோடிக்கும் அதிகமான பதிவிறக்கங்களை பெற்றுள்ள இந்த செயலி, மாதத்திற்கு 224 கோடி பயனாளர்களை கொண்டுள்ளது. உலகளவில் இந்தியாவில் தான் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. இணையவசதி மூலம் குறுஞ்செய்திகளை அனுப்பும் எளிய செயலிதான் என்றாலும், அந்த எளிமைதான் இந்த செயலியின் மாபெரும் வெற்றிக்கு காரணமாக உள்ளது.
அடுத்தடுத்து வரும் அப்டேட்:
மெட்டா நிறுவனம், வாட்ஸ்-அப் பயனார்களை திருப்தி அடைய செய்வதையே முழு நோக்கமாக கொண்டுள்ளது. இதற்காக பயனாளர்களே போதும் போதும் என கூறும் அளவிற்கு அப்டேட்களை, வாரி வழங்கி வருகிறது. அந்த வகையில் போல் உருவாக்குவது மற்றும் டாகுமெண்டை அனுப்புவதில் புதிய அப்டேட்டை வழங்கியுள்ளது.
ஒரு ஆளுக்கு ஒரு வோட்:
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வாட்ஸ்-அப் செயலியில் போலிங் வசதி அறிமுகம் செய்யப்பட்டது. அதனை மேம்படுத்தும் வகையில், வாட்ஸ்-அப் குழுவில் உருவாக்கப்படும் போலிங்கில் ஒருவரால்; ஒருமுறை மட்டுமே வாக்களிக்கும் வகையில், போலிங் கிரியேட்டரால் இனி மாற்றம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்ச் வசதி:
குறுந்தகவல்களை போன்று இனி போல்ஸ்களையும் பயனாளர் தேடி கண்டுபிடிக்கலாம். வழக்கமான சர்ச் ஆப்ஷனை போன்றே சாட் ஸ்கிரீனில் தேடுவதோடு, அதன் முழு விவரங்களையும் அறியலாம்.
போலிங்கை கண்காணிக்கலாம்:
புதிய அப்டேட்டின் மூலம், தான் உருவாக்கிய போலிங்கிற்கு ஏதேனும் வாக்குகள் கிடைத்தால் அதனை பயனாளர் உடனடியாக அறிய நோட்டிபிகேஷன் உருவாக்கப்பட்டுள்ளது.
டாகுமெண்ட்களுக்கு கேப்ஷன்:
ஏற்கனவே போட்டோ மற்றும் வீடியோக்களை மற்றொரு நபருக்கு அனுப்பும்போது, அதில் கேப்ஷன் சேர்க்கும் வசதி பயன்பாட்டில் உள்ளது. அந்த கேப்ஷனை திருத்தி எழுதவும், டெலிட் செய்யவும் புதிய அப்டேட்டில் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. அதோடு சிறப்பம்சமாக டாகுமெண்ட்களை பகிரும்போது இனி கேப்ஷனை சேர்க்க முடியும். இதன்படி, செய்திதாள்கள், வர்க் டாகுமெண்ட்ஸ் ஆகியவற்ரை பகிரும்போதும் இனி கேப்ஷனை சேர்க்கலாம். இந்த புதிய அப்டேட்கள் படிப்படியாக பயனாளர்களுக்கு வழங்கப்பட்டு வருவதாகவும், விரைவில் அனைத்து பயனாளர்களுக்கும் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.
”கூகுள் டிரைவ் தேவைப்படாது”
தற்போது வரை கூகுள் டிரைவில் பேக்-அப் எடுப்பதன் மூலமே, ஒரு போனிலிருந்து மற்றொரு போனிற்கு சாட்-ஹிஸ்டரி தரவுகள் மாற்றிக்கொள்ளப்படுகிறது. ஆனால், விரைவில் ஒற்றை க்யூஆர் கோட் மூலம் மொத்த சாட்-ஹிஸ்டரி தரவுகளையும் ஒரு போனிலிருந்து வேறொரு போனிற்கு மாற்றிக்கொள்ளலாம் என தகவல் வெளியாகியுள்ளது.