இந்திய அளவில் அதிக பயனாளர்களை கொண்ட சமூக வலைத்தளங்களில் வாட்ஸ்-அப்பும்(WhatsApp) ஒன்று. தற்போது வாட்ஸப்பில் கணக்கு வைத்திருந்த 3 மில்லியன் பேரின் அக்கவுண்டை வாட்ஸப் நிறுவனம் நீக்கியுள்ளது. இந்தியாவில் தற்போது அமல்படுத்தப்பட்ட புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின் அடிப்படையில், 50 லட்சத்திற்கு அதிகமான பயனாளர்களை சமூக வலைத்தளங்கள் 45 நாட்களுக்கு ஒரு முறை , புகார்கள் மற்றும் அது தொடர்பான நடவடிக்கைகள் குறித்த விவரங்களை வெளியிட வேண்டும் என்பது விதியாகும். அந்த விதிமுறைக்குள் அடக்கும் வாட்ஸ் அப் நிறுவனம் , தங்களது பயனாளர்களில் 3 மில்லியன் பேரின் அக்கவுண்டை நீக்கியதாக தெரிவித்துள்ளது. ஜூன் மற்றும் ஜூலை ஆகிய மாதங்களில் பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது வாட்ஸ்-அப் நிறுவனம். 46 நாட்களில் பெறப்பட்ட 594 புகார்களில் 3.027 மில்லியன் பயனாளர்களின் கணக்குகள் டெலீட் செய்யப்பட்டுள்ளது.
இதில் 316 வாட்ஸ் அப் நீக்க கோரிக்கைகள் வாட்ஸப் பயனாளர்களிடம் இருந்து வந்ததாகவும் . 73 கோரிக்கைகள் குறைத்தீர்ப்பு அதிகாரிகளிடம் இருந்து பெறப்பட்டுள்ளதாகவும் வாட்ஸப் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்களில் தெரிய வந்துள்ளது. மற்ற புகார்கள் வாட்ஸ் அப் டூல் மற்றும் ரிசோர்சஸ் மூலம் கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இணையத்தை தவறான வழியில் பயன்படுத்துதல், மற்றும் குறைத்தீர்ப்பு அதிகாரிகளிடம் இருந்து பெறப்பட்ட மின்னஞ்சல் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக வாட்ஸ்-அப் விளக்கமளித்துள்ளது. இதன் மூலம் தங்கள் பயனாளர்களின் பாதுகாப்புகள் உறுதிப்படுத்தப்படுவதாகவும், ஸ்பேம் இல்லாத ஒரு சேவையை வழங்க இது உதவியாக இருக்கும் என தாங்கள் நம்புவதாகவும் வாட்ஸ் அப் தெரிவித்துள்ளது.
பயனாளர்களிடம் இருந்து பெறப்படும் நெகட்டிவ் விமர்சனங்கள் மற்றும் குறைகளை வாட்ஸப் நிறுவனம் ஒரு அறிக்கையாக பெறுகிறது.wa@support.whatsapp.com என்ற மின்னஞ்சல் மூலமாக சந்தேகத்திற்குறிய கணக்குகள் அல்லது இணைய வன்முறையில் ஈடுபடும் கணக்குகள் குறித்த புகார்களை தெரிவிக்கலாம்.
அல்லது வாட்ஸ் அப் செயலியில் வழங்கப்பட்டிருக்கும் ரிப்போர்ட் (report) அல்லது பிளாக் (block) வசதிகள் மூலமும் பயனாளர்கள் புகார்களை மறைமுகமாக தெரிவிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வாட்ஸ் அப் தவிர ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களும் இந்திய தகவல் தொழில்நுட்பம் வகுத்துள்ள புதிய விதிக்குள் அடங்கும். முன்னதாக ஃபேஸ்புக் , வாட்ஸ் அப் நிறுவனங்கள் புதிய விதிக்கு சம்மதித்த நிலையில், ட்விட்டர் நிறுவனம் மட்டும் இது பயனாளர்களின் தனி உரிமையை பாதிக்கும் செயல் என நீண்ட காலமாக இழுபறியில் இருந்தது. காலக்கெடுவை தாண்டியும் ட்விட்டர் விதிக்குள் அடங்கவில்லை, பிறகு ஆத்திரமடைந்த மத்திய அரசு தனிநபர் இடும் பதிவுகளுக்கும் நேரடியாக ட்விட்டர் பொறுப்பேற்க வேண்டும் என அறிவித்தது. அதன் பிறகே ட்விட்டர் ஐடி விதிகளுக்கு உட்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.