நீங்கள் இந்தச் செய்தியில் பார்க்கும் இந்த வாகனம் எந்தவொரு விதிகளுக்கும் உட்பட்டு அமைக்கப்படவில்லை. ஆனால் தொழிலதிபர் ஆனந்த் மகிந்திராவுக்கு இது ரொம்பப் பிடித்துவிட்டது. 


ஸ்க்ராப் எனப்படும் வீசி எறியப்பட்ட கார் பாகங்களைக் கொண்டு மகாராஷ்டிராவைச் சேர்ந்த நபர் ஒருவர் ஒரு காரை உருவாக்கியுள்ளார். தத்தேத்ரயா லோஹர் என்ற அந்த நபர், தனது மகனின் ஆசையைப் பூர்த்தி செய்ய அந்த வாகனத்தை உருவாக்கியுள்ளார்.


லோஹர் குறித்து வீடியோ ஹிஸ்டாரிகானோ என்ற யூடியூப் சேனலில் வெளியாகியிருக்கிறது. இந்த வாகனத்தை வெறும் ரூ.60,000 செலவில் லோஹர் உருவாக்கியுள்ளார். இதில் டூவீலர்களில் உள்ளது போல் ஒரு கிக்ஸ்டார்ட்டரும் இருக்கின்றது. 
இந்த வீடியோவைப் பார்த்து ஈர்க்கப்பட்ட தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்துப் பகிர்ந்துள்ளார்.







இது தொடர்பான ட்வீட்டில், "இந்த வாகனம் நிச்சயமாக எந்த ஒரு விதிமுறைக்கும் உட்பட்டு உருவாக்கப்படவில்லை. இது சாலைவிதிகளுக்குப் புறம்பானது எனக் கூறி அதிகாரிகள் இதன் போக்குவரத்தைக் கூட தடுக்கலாம். ஆனால், இதனை உருவாக்குவதின் பின்னணியில் உள்ள புத்திசாலித்தனத்தை நான் ரசிக்கிறேன். நமது மக்களின் திறமையை மதிக்கிறேன். அதுவும் குறிப்பாக அந்த வாகனத்தின் முகப்பு க்ரில் அட்டகாசம். 


அவர் அந்த வாகனத்தை என்னிடம் கொடுக்கட்டும். நான் அதற்குப் பதிலாக அவருக்கு பொலீரோ கார் தருகிறேன். அவரது படைப்பு மகிந்திரா ஆய்வுக் கூடத்தில் காட்சிக்காக வைக்கப்படும். அதைப் பார்க்கும் போதெல்லாம் எங்களுக்கு புதிய ஊக்கம் கிடைக்கும். குறைவான பொருட்களை வைத்துக் கொண்டு எப்படி ஒரு மகத்தான படைப்பை உருவாக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.