வோடஃபோன் நிறுவனம் உலகின் முதல் எஸ்.எம்.எஸ் மெசேஜை ஏலத்திற்கு விடுவதாக அறிவித்துள்ளது. இந்த எஸ்.எம்.எஸ் மெசேஜை non-fungible token (NFT) என்று அழைக்கப்படும் பிளாக்செயின் தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான டேட்டாவாக மாற்றி ஏலத்திற்கு விடுகிறது வோடஃபோன் நிறுவனம். இந்த அறிவிப்பு வோடஃபோன் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. `இது வோடஃபோனின் முதல் NFT ஏலம்.. உலகின் முதல் எஸ்.எம்.எஸ் மெசேஜை NFT ஆக மாற்றி ஏலத்திற்கு விடுகிறது வோடஃபோன். அதில் வரும் தொகை அகதிகளுக்கு வழங்கப்படும்’ என்று அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


கடந்த 1992ஆம் ஆண்டு, டிசம்பர் 3 அன்று உலகின் முதல் எஸ்.எம்.எஸ் மெசேஜ் வோடஃபோன் நெட்வொர்க்கில் இருந்து அனுப்பப்பட்டது. `Merry Christmas’ என்ற இந்த மெசேஜ் வோடஃபோன் நிறுவனத்தின் பணியாளர் ரிச்சார்ட் ஜார்விஸுக்கு அனுப்பப்பட்டது. 



வரும் டிசம்பர் 21 அன்று, பாரீஸில் உலகின் முதல் எஸ்.எம்.எஸ் மெசேஜின் NFT வடிவம், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அக்யூடஸ் என்ற ஏல நிறுவனத்தால் ஏலத்திற்கு விடப்படவுள்ளது. இதனை ஆன்லைனிலும் ஏலத்திற்கு எடுக்கும் வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் எதிர்காலத்தில் வோடஃபோன் நிறுவனம் உலகின் முதல் எஸ்.எம்.எஸ் மெசேஜை மீண்டும் NFTயாக மாற்றாமல் இருப்பதாக ஒப்புதல் அளித்துள்ளது. 






இந்த NFT வடிவத்தை ஏலத்தில் வாங்குபவருக்கு வோடஃபோன் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டு, NFT வடிவத்தின் உறுதித் தன்மையையும், தனித்தன்மையையும் அங்கீகரிக்கும் சான்றிதழ் வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்தச் சான்றிதழை வோடஃபோன் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி நிக் ரெட் கையெழுத்திடுவார். மேலும், இதனை வாங்குபவருக்கு வோடஃபோன் நிறுவனத்தின் கையிருப்பில் உள்ள உலகத்தின் முதல் எஸ்.எம்.எஸ் மெசேஜின் TXT, PDF வடிவ ஃபைல்களும் முழுமையாக வழங்கப்படும். பல்வேறு தரப்பில் வெளியாகியுள்ள தகவல்களின் அடிப்படையில், இந்த ஏலத்தின் மூலம் வோடஃபோன் நிறுவனத்திற்கு 200 ஆயிரம் அமெரிக்க டாலர்களுக்கு அதிகமான லாபம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்திய மதிப்பில் சுமார் 1.5 கோடி ரூபாய் எனக் கணக்கிடப்படுகிறது.



வோடஃபோன் நிறுவனம் இந்த ஏலத்தின் மூலம் பெறப்படும் தொகை முழுவதும் ஐ.நா சபையின் அகதிகள் பாதுகாப்பு நிலையமான அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் தலைமை ஆணையரகத்திற்கு (UNHCR) வழங்கப்படும் எனக் கூறியுள்ளது. இதன்மூலம் உலகம் முழுவதும் போர், இனப்படுகொலை ஆகிய காரணங்களுக்காக தங்கள் சொந்த நாட்டை விட்டு வெளியேறி வாழும் 82.4 மில்லியன் மக்களுக்கு ஆதரவாக நிதி செலவிடப்படும் எனக் கூறப்படுகிறது.