தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரிக் கனவு எனும் மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி தூத்துக்குடியில் நடைபெற்றது. இதில் இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.சிவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது மாணவர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து சிவன் பேசும்போது,சந்திராயன் விண்கலத்தின் அடுத்த வடிவம் தயாராகி வருகிறது.




விரைவில் அது விண்ணில் செலுத்தப்படும். அதற்கான தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. செவ்வாய் கிரகத்துக்கு நாம் ஏற்கனவே வெற்றிகரமாக விண்கலத்தை செலுத்தியுள்ளோம். செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்புவது தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமான ஒன்று தான். அதற்கான ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் செல்ல ஓராண்டு ஆகும். எனவே, மனிதனை அனுப்பினால் ஓராண்டு தாக்குப்பிடித்து திரும்பி பூமிக்கு வரமுடியுமா என்ற கேள்வி உள்ளது. இது தொடர்பான ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்றார்.




தொடர்ந்து செய்தியாளர்களிடம் சிவன் கூறும்போது, சந்திராயன்- 2 திட்டத்தில் உள்ள குறைகள் கண்டறியப்பட்டு, அவைகள் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் சந்திராயன் விண்கலத்தின் புதிய வடிவம் உருவாக்கப்பட்டு, சோதனைகள் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த விண்கலம் குறித்த காலத்தில் விண்ணில் செலுத்தப்படும்.




தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் சிறிய செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தும் வகையிலான சிறிய ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படவுள்ளது. தற்போது சர்வதேச அளவில் சிறிய செயற்கைகோள்களை ஏவும் சிறிய ரக ராக்கெட்டுகளுக்கு அதிக தேவை உள்ளது. பலர் சிறிய ரக செயற்கைகோள்களை விண்ணில் செலுத்த தயாராக உள்ளன. அந்த தேவையை பூர்த்தி செய்யும் வகையில் குலசேகரன்பட்டினத்தில் சிறிய ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படவுள்ளது.




இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி மாநில அரசு சார்பில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 2200 ஏக்கர் நிலம் தேவை. அதில் 80 சதவீத நிலம் கையகப்படுத்தப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. முழு நிலமும் இஸ்ரோ கைக்கு வந்ததும் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் தொடங்கும். முழு நிலமும் கைக்கு வந்ததும் இஸ்ரோ விஞ்ஞானிகள் மூலம் எந்த இடத்தில் ராக்கெட் ஏவுதளத்தை அமைப்பது என்பது குறித்து மண் பரிசோதனை செய்யப்படும். அதன் பிறகு உரிய நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு கட்டுமான பணிகள் தொடங்கும் என்றார்.