ஏடிஎம் அல்லது கிரேடிட் கார்டு பயன்படுத்தி ஆன்லைனில் பொருட்கள் வாங்கு வருபவராக நீங்கள் இருந்தால் உங்களுக்கு விரைவில் புதிய கட்டுப்பாடுகள் வர உள்ளன. அதாவது இதுவரை நீங்கள் பேடிஎம், கூகுள் பே, போன்பே உள்ளிட்ட செயலிகள் உங்களுடைய கிரேடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு ஆகியவற்றின் விவரங்களை ஸ்டோர் செய்து வைத்து கொள்ளலாம். ஆகவே ஒவ்வொரு முறை நீங்கள் ஆன்லைனில் பொருட்கள் வாங்கும் போது சிவிவி எண் மற்றும் ஓடிபி ஆகியவற்றை கொடுத்தால் எளிதாக உங்களுடைய பணத்தை செலுத்திவிடலாம்.
ஆனால் இனிமேல் இந்த முறையில் சில மாற்றங்களை கொண்டு வர ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. அதன்படி இனிமேல் பேடிஎம்,கூகுள் பே, போன் பே, நெட்ஃபிளிக்ஸ் உள்ளிட்ட எந்த தளத்திலும் உங்களுடைய கிரேடிட் அல்லது டெபிட் கார்டு விவரங்களை ஸ்டோர் செய்து வைக்க முடியாது. ஆகவே ஒவ்வொரு முறை நீங்கள் கிரேடிட் அல்லது டெபிட் கார்டு ஆகியவற்றை பயன்படுத்தும் போது உங்களுடயை கார்டின் 16 இலக்க எண், செல்லுபடியாகும் கடைசி வருடம் மற்றும் மாதம் ஆகிய விவரத்தை தரவேண்டும். அதன்பின்னர் மீண்டும் சிவிவி எண் மற்றும் ஓடிபி ஆகியவற்றை கொடுத்து பணத்தை செலுத்த வேண்டும்.
இந்த முறையின் மூலம் உங்களுடைய கார்டு விவரங்கள் பாதுகாக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனா ஊரடங்கு காலத்தில் அதிகளவில் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை நடைபெற்று வருகிறது. இதனால் நிறையே இடங்களில் ஆன்லைன் பண மோசடி அதிகரித்துள்ளது. அதற்கு வாடிக்கையாளர்களின் டெபிட் மற்றும் கிரேடிட் கார்டு விவரங்கள் கசிந்து போவது ஒரு காரணமாக கருதப்படுகிறது.
எனவே இவ்வாறு மோசடி நடப்பதை தடுக்கும் பொருட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த புதிய நடைமுறை வரும் 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அமல்படுத்தப்படலாம் என்று தெரிகிறது. எனினும் இந்த நடைமுறை படுத்தப்படும் தேதி தொடர்பாக விரிவான தகவல் எதுவும் இல்லை. இந்த முறைப்படி ஆன்லைனில் பொருட்களை வாங்கும் போது நீங்கள் அந்த சமயத்தில் மட்டும் அந்த தளத்தில் உங்களுடைய கார்டு விவரங்களை அளிப்பதால் அந்த விவரங்கள் கசிவதற்கு வாய்ப்பு குறைவு என்று கருதப்படுகிறது. இந்த நடைமுறை அனைத்து இ-சேவை நிறுவன செயலிகளுக்கும் பொருந்தும் வகையில் இருக்கும் என்று தெரியவந்துள்ளது.
பொதுவாக கிரேடிட் கார்டு மற்றும் டெபிட் கார்ட் எண்கள் 16 இலக்கத்தில் இருக்கும். அதேபோல் சிவிவி எண் 3 இலக்கத்தில் இருக்கும். சிவிவி எண்ணை நம்மால் எளிதில் நியாபகத்தில் வைத்து கொள்ள முடியும். ஆகவே ஒவ்வொரு முறையும் கார்டை தேட வேண்டியதில்லை. ஆனால் புதிய நடைமுறை அமலுக்கு வந்தால் நாம் 16 இலக்க கார்டு எண் தெரியவில்லை என்றால் ஒவ்வொரு முறையும் கார்டை வைத்து தான் ஆன்லைனில் பொருட்களை வாங்க முடியும். இது ஒரு பெரிய சிக்கலாக அமைந்துவிடும் என்றாலும் நம்முடைய தகவல் கசியாமல் இருப்பதில் இருந்து காக்கப்படும்.
மேலும் படிக்க: பட்ஜெட் விலை.. ஆச்சரியப்பட வைக்கும் சிறப்பம்சங்கள்.. ரியல்மியில் புது மாடல் போன் விவரங்கள்!