ஒவ்வொரு ஆண்டும் பூமி அதன் சுற்றுப்பாதையில் சுழலும்போது சூரியனுக்கு அருகில் வந்து செல்லும். அந்த வகையில் ஜனவரி 3 ஆம் தேதி இன்று இந்திய நேரப்படி 6.08 மணிக்கு பூமி சூரியனுக்கு மிகவும் அருகில் வந்து சென்றது. இந்த நிகழ்வு பெரிஹெலியன் (perihelion) என அழைக்கப்படும்.
ஒவ்வொரு ஆண்டும், டிசம்பர் மாத கதிர் திருப்ப நிகழ்வு முடிந்து இரண்டு வாரங்களுக்குப் பிறகு ஜனவரி 2 முதல் 4 வரை பெரிஹெலியன் நிகழ்வு நடைபெறும். அதேபோல் பூமியின் சுற்றுப்பாதையில் சூரியனில் இருந்து மிக தொலைவில் உள்ள ஒரு புள்ளியும் உள்ளது. இந்த பகுதி அபிலியன் (aphelion) என்று அழைக்கப்படுகிறது. இப்படி சூரியனுக்கு அருகே மற்றும் தொலைவில் பூமி வந்து செல்வதற்கு முக்கிய காரணம், அது நீள்வட்ட பாதையில் சுற்றி வருவது தான். இன்று, ஜனவரி 3 ஆம் தேதி, பூமி சூரியனில் இருந்து 14,71,00,632 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும். அதாவது, கிட்டத்தட்ட 150 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் என்று timeanddate.com தெரிவித்துள்ளது.பெரிஹெலியன் என்ற சொல் பண்டைய கிரேக்க வார்த்தைகளான பெரி மற்றும் ஹீலியோஸ் என்பதிலிருந்து பெறப்பட்டது, அதாவது அருகே மற்றும் சூரியன் என அர்த்தம். பெரிஹெலியன் மற்றும் அபெலியன் ஆகியவை ஆப்சைடுகள் என்று அழைக்கப்படுகின்றன, அவை பூமிக்கு மட்டுமல்ல பிற வானியல் பொருளின் சுற்றுப்பாதையில் உள்ள ஒரு குறுகிய அல்லது நீண்ட தூரத்தின் புள்ளிகளாக வரையறுக்கப்படுகின்றன.
சூரியனைச் சுற்றியுள்ள பூமியின் சுற்றுப்பாதையின் வடிவம் சந்திரன் உட்பட மற்ற கோள்களின் ஈர்ப்பு விசை காரணமாக மாறிக்கொண்டே இருக்கிறது. இதன் விளைவாக, சூரியனைச் சுற்றியுள்ள பூமியின் சுற்றுப்பாதை ஒவ்வொரு 100,000 வருடங்களுக்கு ஒருமுறை மாறுபடுகிறது. அதாவது கிட்டத்தட்ட வட்டமான பாதையில் இருந்து நீள்வட்டமாக மாறுகிறது. எக்சென்ட்ரிசிட்டி (eccentricity) என்பது ஒரு நீள்வட்ட வடிவம் ஒரு சரியான வட்டத்திலிருந்து வேறுபடும் அளவை வரையறுக்கிறது. ஒரு வட்ட வடிவத்தில் அதன் எக்செண்ட்ரிசிட்டி பூஜ்ஜியமாக இருக்கும். ஆனால் நீள்வட்டத்திற்கு எக்சென்ட்ரிசிட்டி பூஜ்ஜியம் முதல் 1 வரை இருக்கும். சூரியனைச் சுற்றியுள்ள பூமியின் சுற்றுப்பாதையின் எக்சென்ட்ரிசிட்டி மதிப்பு வெவ்வேறு கோள்களால் வெளிப்படும் ஈர்ப்பு விசைகளின் காரணமாக மாறிக்கொண்டே இருக்கும். இதன் விளைவாக, பெரிஹெலியன் குறிப்பிட்டு இந்த நாளில் தோன்றும் என நிர்ணயிக்கப்படவில்லை.