உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் பலவும் நெருக்கடி காரணமாக, ஆயிரக்கணக்கான ஊழியர்களை அதிரடியாக பணிநீக்கம் செய்து வருகிறது. இதனால், ஊழியர்கள் பலரும் கடும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்நிலையில், 5 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ள மைக்ரோசாப்ட் நிறுவன தலைமை செயல் அதிகாரி சத்ய நாதெல்லா, மும்பையில்  தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார்.


அதிகரித்த தேவை குறைந்துள்ளது:


அப்போது, "தொழில்நுட்பத் துறை எவ்வளவு தூரம் வந்துள்ளது என்பதன் அடிப்படையில் சொல்கிறேன், இது எங்களுடைய திறமையை வெளிப்படுத்தும் நேரம். தொழில்நுட்ப துறையில் நடக்கும் மிகவும் உற்சாகமான விஷயம் என்றால் அது செயற்கை நுண்ணறிவு திறன் பயன்பாட்டிற்கு வருவது தான். கொரொனா பரவல் காரணமாக ஏற்பட்ட தேவை அதிகரிப்பு தற்போது தணிய தொடங்கியுள்ளது. இது உலகின் பல பகுதிகளில் மந்தநிலையுடன் சேர்த்து,  தொற்றுக்கு முந்தைய சூழலில் இருந்த இயல்புநிலையையும் மீண்டும் கொண்டு வருகிறது.


2 ஆண்டுகளுக்கு மோசமான சூழல்:


அடுத்த இரண்டு ஆண்டுகள் என்பது தொழில்நுட்ப துறைக்கு மிகுந்த சவால் வாய்ந்ததாக இருக்கும். இதனால் உலகின் பல பகுதிகளிலும் உண்மையான தீவிரமான நெருக்கடி உள்ளது. அதேநேரம், கடும் வலி நிறைந்த அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தொழில்நுட்பத்துறை பிரமாண்ட வளர்ச்சியை அடையும்.


தொழில்நுட்பத்தின் உச்சம் எது?


செல்போன்கள் மற்றும் கிளவுட் தான் தொழில்நுட்ப துறையின் உச்சகட்டம் என்று யாரேனும் நினைத்தால், செயற்கை நுண்ணறிவு திறன் தான் தொழில்நுட்பத்தின் உச்சகட்டம் என நான் நினைக்கிறேன். அதுவும் அடுத்த இரண்டு அல்லது மூன்று வருடங்களில் நடக்கப் போகிறது.  2007-2008ம் ஆண்டுகளில் செல்போன் மற்றும் கிளவுட் வசதி அறிமுகமானபோது பொதுமக்கள் எத்தகைய மனநிலையில் இருந்தனரோ, அப்படி ஒரு நிலையில் தான் தற்போது செயற்கை நுண்ணறிவு மீதும் கொண்டுள்ளனர்" என்றார். 


முதலிடத்தில் இந்தியா:


இந்தியாவைப் பற்றிப் பேசுகையில், “செயற்கை நுண்ணறிவு திட்டங்கள் என வரும்போது உலகளவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.  அப்படியானால், தொழில்நுட்பதுறையில் அடுத்த யுகமாக செயற்கை நுண்ணறிவு திறன் இருக்கும்.  எனவே இந்தியா மீது நீண்ட காலத்திற்கு கவனம் செலுத்த  வேண்டும். அதோடு, 6-7 சதவிகித வளர்ச்சியை காண்பது என்பது இந்தியாவிற்கு சர்வ சாதாரணமாக விஷயமாக உள்ளது. பணவீக்கம் மற்றும் மந்தநிலை போன்ற பிரச்னைகள் பல நாடுகளுக்கு சவாலாக இருந்தாலும், அவற்றில் இருந்து விதிவிலக்காக இருக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது.  இதன் காரணமாக தான் இந்தியா மீது மைக்ரோசாப்ட் நிறுவனம் மிகவும் உறுதியாக உள்ளது. அதோடு அதிக முதலீடுகளையும் செய்து வருகிறது. தற்போதைய கேள்வி என்பது எங்களுடைய தொழில்நுட்பம் அனைத்தையும் கொண்டு, அடுத்ததாக இந்தியா எதை உருவாக்க போகிறது என்பது தான்” எனவும், சத்யா நாதெல்லா பேசியுள்ளார்.






 


பிரதமருடன் சந்திப்பு


இந்நிலையில், பிரதமர் மோடியை மைக்ரோசாப்ட் நிறுவன தலைமை செயல் அதிகாரி சத்ய நாதெல்லா சந்தித்துள்ளார். இதுதொடர்பான் டிவிட்டர் பதிவில், டிஜிட்டல் இந்தியா பார்வையை உணர்ந்து உலகிற்கு வெளிச்சமாக இந்தியாவுக்கு உதவ நாங்கள் எதிர்நோக்குகிறோம் என, பிரதமர் மோடி உடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.