ட்விட்டர் அக்கவுண்ட் வெரிஃபைடு கணக்கின் சந்தாவிற்கு பணம் செலுத்தாததால் புகழ்பெற்ற அமெரிக்க செய்தி ஊடகமான நியூயார்க் டைம்ஸ்-ன் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளது. ட்விட்டரில் வெரிஃபைடு கணக்கினைப் பெறுவதற்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்ற புதிய நடைமுறையை அதன் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் அறிவித்திருந்தார். இந்நிலையில், சந்தா கட்டணம் செலுத்தாத காரணத்தால் இன்று (ஏப்ரல்,2) நியூயார்க் டைம்ஸ்-ன் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளது.


ப்ளூ டிக்:


டிவிட்டரில் வெரிஃபைட் அக்கவுண்ட் பெறுவதற்கு பயனர்கள் கட்டணம், மாத சந்தா செலுத்த வேண்டியது அவசியம் என்று ட்விட்டர் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு காலக்கெடுவும் விதித்திருந்தது. இந்நிலையில், பணம் செலுத்தாதவர்களுக்கு வழங்கப்பட்ட ப்ளூ டிக் ஏப்ரம் மாதம் 1-ஆம் தேதியிலிருந்து நீக்கப்படும் என்றும் வெரிஃபைடு கணக்கிற்கான  ப்ளூ டிக் பெறவும், தொடரவும் சந்தாதாரராக மாற பயனாளர்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. 


எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தின் வணிகத்தை அதிகரிக்கவும், லாபத்தை ஈட்டுவதற்காகவும் பல்வேறு நடைமுறை எடுத்துவருகிறார். டிவிட்டர் அலுவலகத்தின் செலவுகளை குறைக்க வேண்டும் என்றும் அவர் பணியாளர்களுக்கு ஏற்கனவே வலியுறுத்தியிருந்தார்.


எலான் மஸ்க்கும் டிவிட்டரும்:


ட்விட்டரில் அதிக அளவிலான பங்குகளை உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் (Elon Musk) வாங்கிய பிறகு நிர்வாக ரீதியாகவும், ட்விட்டர் செயலியின் தொழில்துட்பம் ஆகியவற்றில் பல மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார். டிவிட்டர் தனது பயனர்களுக்காக பல்வேறு புதிய அப்டேட்களை வழங்கி வருகிறது. ட்விட்டரில் போலியான பயனர்களை கண்டறியும் வகையில் வெரிஃபிகேசன் முறையிலும் மாற்றங்களை செய்ய திட்டம் குறித்து தெரிவித்திருந்தார்.  பயனர்களின் உண்மைத்தன்மை, உண்மையான அடையாளத்தை உறுதிபடுத்துவதற்கு பயன்படுத்தப்படும் ப்ளூ டிக் முறைக்கு மாதம் 8 அமெரிக்க டாலர் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் சமீபத்தில் அறிவித்திருந்தார்.


மேலும் பிரபலங்களின் அங்கீகரிக்கப்பட்ட கணக்குகளுக்கு 'official' எனும் பேட்ச் வழங்கப்படும் எனவும், போலி கணக்குகளுக்கு 'parody' எனும் பேட்ச் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். 


வண்ணங்களின் விவரம்:


கோல்டு நிற டிக் தனியார் உள்ளிட்ட நிறுவனங்களுக்கும், அரசு அலுவலகங்களுக்கு கிரே அதாவது சாம்பல் நிற டிக், பிரபலங்கள் அல்லது தனிநபர் ஆகியோருக்கு ப்ளூ நிற டிக் என்ற நடைமுறை இனி தொடர உள்ளது.


கிரே டிக் மற்றும் ’official’ என்ற லேபிள் கட்டணம் செலுத்தி வாங்க முடியாது என்று ட்விட்டர் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. ’official' என்ற லேபிள் அரசு சார்ந்த ட்விட்டர் அக்கவுண்ட்கள், வணிக ரீதியிலான நிறுவனங்கள், பெரும் செய்தி ஊடகங்கள், பதிப்பாளர்கள் மற்றும் பிரபலமானவர் ஆகியோருக்கு மட்டுமே வழங்கப்படும் என்று டிவிட்டர் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.


டிவிட்டர் வெரிஃபைடு 


கடந்த 2009 ஆம் ஆண்டு ட்விட்டர் நிறுவனம் வெரிஃபைடு அக்கவுண்ட் முறைகளை அறிமுகம் செய்திருந்தது. பிரபலங்கல், அரசியவாதி, பிரபல நிறுவனங்கள், பிராண்ட்கள் உள்ளிட்டவற்றை அடையாள கண்டுகொள்ள உதவும் வகையில் இம்முறை அறிமுகம் செய்யப்பட்டது.


டிவிட்டர் வெப் என்றால் மாதம் ஒன்றிருக்கு 8 அமெரிக்க டாலர்கள், அதுவே ஐ.ஓ.எஸ். அல்லது ஆண்ட்ராய்டு ஆப் என்றால் 11 அமெரிக்க டாலர்கள் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 8 ஆம் தேதி இந்தியாவில் தொடங்கப்பட்ட இந்தச் சேவை, இணையத்தில் ரூ.650 மற்றும் மொபைல் சாதனங்களில் ரூ.900 எனும் கட்டணத்தில் கிடைக்கிறது. இதேபோன்று, இந்தக் கணக்குகள் வணிகமாகவோ அல்லது லாப நோக்கத்திற்காகவோ இருந்தால் கோல்டன் டிக், குறிப்பிட்ட கட்டணத்தை செலுத்தி பெறலாம். அரசு அமைப்புகளுக்கு கிரே குறியீடு வழங்கப்படுகிறது.


ட்விட்டரில் கோல்ட் டிக் பெறுவதற்கு வரியோடு மாதம் 1000 அமெரிக்க டாலர் செலுத்த வேண்டும். க்ரே டிக் பெறுவதற்கு 50 அமெரிக்க டாலர் கட்டணம் செலுத்த வேண்டும் என்று டிவிட்டர் தெரிவித்துள்ளது. இந்நிலையில், நியூயார்க் டைம்ஸ்-இன் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.