கொரோனா பேரிடர் காலக்கட்டம் உலகயே தலைகீழாக திருப்பி போட்டுவிட்டது. அதுவரையில் அலுவலகம் வந்து வேலை பார்க்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த நிறுவனங்களும் கூட , தங்களின் நிலைப்பாடுகளில் இருந்து மாறி , வொர்க் ஃபிரம் ஹோம் அதாவது ஊழியர்களை வீட்டில் இருந்து வேலை செய்ய ஊக்கப்படுத்தின. இந்த நிலை ஐடி மட்டுமல்லாது பல்வேறு துறைகளுக்கும் பொருந்தும். மெல்ல மெல்ல கொரோனா தாக்கத்தில் இருந்து உலகம் மீண்டு வந்தாலும் , பல நிறுவனங்கள் வொர்க் ஃபிரம் ஹோமையே பரிந்துரைக்கின்றன. கூகுள் போன்ற மிகப்பெரிய நிறுவனங்கள் அலுவலகம் வந்து வேலை செய்வதும் வீட்டில் இருந்து வேலை செய்வதும் ஊழியர்களில் விருப்ப தேர்விற்கே விட்டுவிட்டது.
அலுவலகம் சக ஊழியர்களின் சந்திப்பை ஏற்படுத்திக்கொடுக்கும், ஆரோக்யமான கலந்துரையாடல்களுக்கும் வழிவகுக்கும். ஆனால் வீட்டில் இருந்து பணிபுரிவோருக்கு அந்த வாய்ப்புகள் கிடைப்பதில்லை. மேலும் அலுவலகம் சாந்த மீட்டிங்கிற்கு நிறுவனங்கள் வீடியோகால் செயலிகளை பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் வீடியோ காலில் கேமராவை ஆன் செய்து வைத்தால் அது ஊழியர்களுக்கு சோர்வை ஏற்படுத்தும் என ஒரு ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளது.
அரிசோனா பல்கலைகழகத்தின் பேராசிரியர் அலிசன் கேப்ரியல் ஆராய்ச்சி ஒன்றை நடத்தினார். அதில் சுமார் 103 நபர்கள் பங்கேற்றனர். இவர்கள் பல்வேறு கட்டங்களாக ஆய்விற்கு உட்படுத்தப்பட்டன. கிட்டத்தட்ட 1400 க்கும் மேற்பட்ட கவனிப்புகளை உள்ளடக்கியதாக இருந்திருக்கிறது அந்த ஆய்வு. அதன் முடிவில் அலிசன் மற்றும் அவரது குழுவினருக்கு, கேமரா முன்பு அமர்ந்து வேலை செய்யும் ஊழியர்கள் , கேமரா இல்லாமல் வேலை செய்யும் நபர்களை விட விரைவில் சோர்ந்து விடுவதை கண்டுள்ளனர். கேமராவில் இருந்து வெளிப்படும் அதிக அளவிலான ஆற்றல் , அதன் முன்பு அமர்ந்திருக்கும் நபருக்கு களைப்பை ஏற்படுத்துவதே இதற்கான காரணமாக கூறப்படுகிறது. மேலும் சோர்வின் காரணமாக அவர்களுக்கு வேலை மீதான ஈடுபாடும் குறைந்து விடுகிறதாம்.
எனவே நேரடியாக அலுவக வேலையில் ஈடுபடுவதே ஊழியர்களுக்கும் நிறுவனங்களுக்கும் சிறந்தது என ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளார் அலிசன் கேப்ரியல். மேலும் வீட்டில் இருந்து பணிபுரியும் ஊழியர்கள் , அலுவலக மீட்டிங்கின் பொழுது அறைகளை இடையூறு இல்லாமல் வைத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. அதேபோல அமர்ந்திருக்கும் பேக்ரவுண்ட் செட்டப்பை மாற்ற வேண்டிய கட்டாயத்திற்கும் உட்படுத்தப்படுகிறார்கள் இது அவர்களுக்கு கூடுதல் மன உளைச்சலை ஏற்படுத்தலாம் என்கிறார் அலிசன் கேப்ரியல். லேப்டாப்பில் அதிக நேரம் வேலை செய்தால் ஏற்படும் சோர்வை ’ஜூம் சோர்வு (Zoom fatigue)’ என அழைக்கின்றனர். தற்போது கேமராவும் சோர்வை ஏற்படுத்தும் என கண்டறிந்துள்ளது வீட்டில் இருந்து பணிபுரிபவர்களுக்கு சற்று அதிர்ச்சியளிக்க கூடிய விஷயம்தான்.
பொதுவாகவே ஆன் கால் மீட்டிங்கில் , கேமராவை ஆஃப் செய்து வைத்திருக்கும் நபர்களை விட ஆன் செய்து வைத்திருக்கும் நபர்களே அதிக ஈடுபாட்டுடன் இருப்பதாக கருதப்படுகிறது. ஆனால் அது தனக்குதானே வைத்துக்கொள்ளும் ஆப்புதான் என்கிறது இந்த ஆய்வறிக்கை .இந்த ஆய்வு முடிவு தற்போது ஜெர்னல் ஆஃப் அப்ளைட் சைக்காலஜி என்ற மாதாந்திர பத்திரிக்கையில் வெளியிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.