செவ்வாய் கிரகத்தில் பெர்ஸீவரன்ஸ் ரோவர் நூல் போன்ற ஒன்றை புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது. அது என்னவென்று விஞ்ஞானிகள் குழப்பமடைந்துள்ளனர்.


பெர்சீவரன்ஸ் ரோவர்:


செவ்வாய் கோளில் மனிதனை குடியேற்றம் செய்யும் முயற்சியின் ஒருபகுதியாக செவ்வாயின் காலநிலைகள், நிலப்பரப்பு, தண்ணீர், காற்று உள்ளிட்ட மனிதன் வாழ்வதற்கு தேவையான கூறுகள் இருக்கின்றனவா என்பதை ஆய்வு செய்ய மார்ஷ் மிஷன் 2020ஐத் தொடங்கியது நாசா. இதற்கு முன்பு நாசா கடந்த 2011ல் அனுப்பிய க்யூரியாசிட்டி ரோவர் செவ்வாயை புகைப்படம் எடுத்து இன்னும் அனுப்பி வருகிறது. ஆனால், பல்வேறு உயர் ரக தொழில்நுட்ப உபகரணங்கள் அடங்கிய ’பெர்சீவரன்ஸ்’ ரோவர் மற்றும் ’இன்ஜென்யூட்டி’ ஹெலிகாப்ட்டர் ஆகியவற்றை சேர்த்து செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பியது நாசா. கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. அதுமுதலே செவ்வாய் கோளின் புகைப்படங்களை பல்வேறு பரிமாணங்களில் எடுத்து அனுப்பி வருகிறது பெர்சீவரன்ஸ் ரோவர்.




கேமராக்கள்:


பெர்சீவரன்ஸ் ரோவரில் அதிநவீன கேமராக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஹஸார்ட் அவாய்டன்ஸ் கேமரா, நேவிகேஷன் கேமரா மற்றும் கேஷ் கேமரா என்ற 3 கேமராக்கள் இந்த ரோவருடன் இணைக்கப்பட்டுள்ளன. இந்த  மார்ஸ் மிஷனின் முக்கிய அங்கமே கேமராக்கள் தான். ரோவர் எந்த திசையில் செல்ல வேண்டும், செல்லவேண்டிய பாதை சரியாக இருக்கிறதா, ரோவரை நகர்த்த சிறந்த வழி எது என்பது உள்ளிட்டவற்றை மனிதனின் உதவி இல்லாமலேயே தானே தீர்மானிக்க உதவி செய்கின்றன இந்த கேமராக்கள். இந்த ரோவரில் மொத்தமாக 23 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கேமராக்கள் மூலம் பெர்சீவரன்ஸ் ரோவர் இதுவரை எடுத்த பல்வேறு புகைப்படங்கள் விஞ்ஞானிகளை ஆச்சரியப் படுத்தியுள்ளது. ஆனால், இதில் உள்ள ஹஸ்கேம் எடுத்த சமீபத்தையப் புகைப்படம் விஞ்ஞானிகளை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.




ஹஷ் கேமரா:


கடந்த ஒன்றரை வருடங்களில் இதுவரை 11.79 கி.மீட்டர்கள் பயணித்துள்ள பெர்சீவரன்ஸ் ரோவர் தற்போது டெல்டா பகுதியில் நகர்ந்து கொண்டிருக்கிறது. கடந்த ஜூன் 12ம் தேதி தான் செல்லும் வழியில் சிக்கலான நூல் போன்ற ஒன்றை படம் பிடித்து அனுப்பியிருக்கிறது அதில் உள்ள ஹஷ்கேம். இந்த ஹஷ்கேம்கள் பெர்சீவரன்ஸின் முன்னால் 4 கேமராக்களும், பின்னால் 2 கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கேமராக்கள் தான் செல்லும் வழியில் பெரிய பாறைகள், மணல் திட்டுகள், அகழிகள் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்து பாதையை தீர்மானிக்கும். அதே போல எந்த இடத்தில் பாறைகளின் சாம்பிள்களை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்யும். இது செல்லும் வழியில் அவ்வபோது அதன் பாதையை புகைப்படம் எடுத்து அனுப்பும். அப்படி அனுப்பிய புகைப்படம் ஒன்றில் தான் இந்த சிக்கலான ஒன்று கிடப்பதை கண்டுபிடித்திருக்கின்றனர் விஞ்ஞானிகள்.




குழப்பமான பொருள்:


சிக்கிய நூல் அல்லது நார் கிடந்தால் எப்படி இருக்குமோ அதே போன்று இருக்கிறது அது. பூமியில் அது சாதாரண விஷயம். ஆனால், செவ்வாயில் அது ஆச்சரியமான விஷயம். அது எப்படி அங்கு வந்தது? செவ்வாயில் வேறு யாரும் வாழ்கிறார்களா? அந்த சிக்கலான பொருள் என்னவென்று விஞ்ஞானிகள் குழம்பியிருக்கின்றனர்.


இது பெர்ஸீவரன்ஸ் ரோவர் இறங்க பயன்படுத்தப்பட்ட வாகனத்தில் உள்ள மிச்சம் மீதியில் இருந்து வந்ததாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. பெர்ஸீவரன்ஸ் ரோவரை எடுத்துச் சென்ற வாகனம் செவ்வாயில் அதை இறக்கி விட்டுவிட்டு சிறிது தூரம் சென்று விழுந்துவிட்டது.




என்ன அது?


அதே போல, பெர்ஸீவரன்ஸை தரையிறக்கிய பாராசூட்டும் தனியாக சென்றுவிட்டது. சமீபத்தில் கூட இந்த உடைந்த பொருள்களையும், பாராசூட்டையும் படம் பிடித்து அனுப்பியிருந்தது பெர்ஸீவரன்ஸ். இந்த உடைபாடுகளில் இருந்து வந்ததாகக் கூட இந்த சிக்கலான நூல் இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஆனால், இதுதான் என்று எந்த முடிவுக்கும் இதுவரை வரவில்லை, இதுபற்றிய தொடர் ஆய்வுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.