பிரபலங்கள் தொடர்புடைய சில வித்தியாசமான பிரச்னைகளை ஃபேஸ்புக் பயனாளிகள் சந்தித்துவரும்  நிலையில், இதுகுறித்து பதிவிட்டும், மீம்ஸ் பகிர்ந்தும் இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.


மெட்டாவுக்குச் சொந்தமான சமூக வலைதள பிளாட்ஃபார்மான ஃபேஸ்புக்கின் நியூஸ் ஃபீடில் முன்னதாக பிரபலங்களின் பக்கங்களில் பகிரப்படும் தொடர்பற்ற பல பதிவுகள் நிரம்பி வழிந்த வண்ணம் இருந்துள்ளது.


DownDetector.com.au எனும் பிரபல தொழில்நுட்ப இணையதளம் முன்னதாக இந்தப் பிரச்னை குறித்து பகிர்ந்துள்ளது. 


அதன்படி, ஃபேஸ்புக்கின் நியூஸ் ஃபீடில் பொதுவாகக் காண்பிக்கப்படும் முக்கியச் செய்திகளில் லேடி காகா, நிர்வாணா பேண்ட், தி பீட்டில்ஸ் பேண்ட் போன்ற கலைஞர்களின் பக்கங்களில் பகிரப்படும் தொடர்பற்ற செய்திகள் நிரம்பி வழிவதாக முன்னதாக ஃபேஸ்புக் பயனர்கள் புகார் அளித்துள்ளனர்.


மேலும், 43 %பயனர்கள் செயலியில் சிக்கல்கள் இருப்பதாகவும், 40 % பயனர்கள் நியூஸ்ஃபீடில் சிக்கல் இருப்பதாகவும், 16 சதவீதம் பேர் பொதுவாக ஃபேஸ்புக தளம் குறித்தும் முன்னதாக புகார் அளித்துள்ளனர்.






ஆனால், இதுவரை இந்த செயலிழப்பு அல்லது தொழில்நுட்பக் கோளாறு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.






"வேறு யாருடைய பேஸ்புக் ஃபீட் முழுவதுமாக இப்படி செயலிழந்துவிட்டதா?” என்றும் குப்பை செய்திகளால் ஃபேஸ்புக் நிரம்பி வழிகிறது என்றும் ஃபேஸ்புக் ஹேக் செய்யப்பட்டதா என்றும் நெட்டிசன்கள் விவாதித்து வருகின்றனர்.






மற்றொருபுறம் மார்க் சக்கர்பெர்கே வந்துதான் இந்தப் பிரச்னைகளுக்கு தீர்வுகட்ட வேண்டும் என வழக்கம்போல் தங்கள் குறும்பான பதிவுகளால் நெட்டிசன்கள் கிச்சுகிச்சுமூட்டி வருகின்றனர்.






ஃபேஸ்புக்கின் இந்த பக் குறித்து ட்விட்டர் தளத்தில் மீம்ஸ்களைத் தெறிக்கவிடும் நெட்டிசன்கள், ஐபோன் பயனாளிகள் மட்டும் தான் இந்தப் பிரச்னைகளை எதிர்கொள்கிறார்களா என்றும் விவாதித்து வருகின்றனர்.