மைக்ரோசாப்ட் மென்பொருளில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு விட்டதாக கிரவுடு ஸ்ட்ரைக் என்னும் சைபர் செக்யூரிட்டி நிறுவனம் தெரிவித்துள்ளது. இன்னும் சில மணி நேரத்தில் பழைய நிலைமை திரும்பி விடும் என்றும் தெரிவித்துள்ளது.
மென்பொருளில் சிக்கல்:
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முக்கியமான மென்பொருள்களில் ஒன்றாக கிளவுட் உள்ளது. சாப்ட்வேர் மற்றும் விமான சேவை துறைகளில் கிளவுடின் பங்களிப்பு தவிர்க்க முடியாதது. இந்த சூழலில், அமெரிக்காவில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கிளவுட் மென்பொருள் பாதிக்கப்பட்டது. இதன் தாக்கமானது, உலகில் உள்ள பல நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியது.
குறிப்பாக, இந்தியாவிலும், அமெரிக்காவிலும் கிளவுட் மென்பொருள் சேவை மிக கடுமையாக பாதிக்கப்பட்டது. போர்டிங் பாஸ் வழங்குவதில் கிளவுட் மென்பொருள் சேவை முக்கிய பங்காற்றி வருகிறது. இதனால், பல விமானங்களின் சேவைகள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் முக்கியமான விமான நிறுவனங்களான இந்தியன் ஏர்லைன்ஸ், இண்டிகோ மற்றும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனங்களின் சேவைகள் பாதிக்கப்பட்டது.
சிக்கல் தீர்க்கப்பட்டது:
இந்நிலையில் இந்த சிக்கல் சரிசெய்யப்பட்டு விட்டதாக கிளவுட் பாதுகாப்பு நிறுவனமான கிரவுடு ஸ்ட்ரைக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த சிக்கல் குறித்து Crowdstrike நிறுவனம் தெரிவிக்கையில், மைக்ரோசாப்ட் இயக்க முறைமைகளைத் தாக்கிய புதுப்பித்தலில் ( UPDATE ) ஏற்பட்ட பிழையால் இந்த சிக்கல் ஏற்பட்டது
"பிரச்சினை என்னவென்று எங்களுக்குத் தெரியும், மேலும் சிக்கலைத் தீர்த்துவிட்டோம்,
இந்நிலையில் சில சிஸ்டங்கள் தானாகவே மீண்டு வராமல் போகும்பட்சத்தில், சிறிது நேரம் ஆகலாம். ஆனால், ஒவ்வொரு வாடிக்கையாளரும் முழுமையாக மீட்கப்படுவதை உறுதி செய்வதே எங்கள் நோக்கம்" என்று கிரவுடு ஸ்டிரைக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பாதிப்பு:
இந்த பாதிப்பானது, விமான சேவை மட்டுமின்றி மென்பொருள் நிறுவனங்களிலும் இதன் பாதிப்பு மிக மோசமாக ஏற்பட்டது. இந்தியாவின் முக்கிய நகரங்களான சென்னை, பெங்களூரு, மும்பை, ஹைதரபாத், கொல்கத்தா, டெல்லி மற்றும் நாக்பூரில் இதன் தாக்கம் அதிகளவில் விமான சேவையிலும், மென்பொருள் நிறுவனங்களிலும் காணப்பட்டது.
இந்தியாவின் பெரிய விமான நிறுவனங்களான இண்டிகோ, ஆகாசா மற்றும் ஸ்பைஸ்ஜெட்டிலும் கிளவுட் மென்பொருள் முடங்கியதால் செக் – இன் முறை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து, பயணிகள் பாதிக்கக்கூடாது என்பதற்காக பல விமான நிலையங்களில் போர்டிங் பாஸ் கைகளிலே எழுதப்பட்டு வழங்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், இந்த சிக்கல்கள் தீர்க்கப்பட்டதாகவும், சில மணி நேரங்களில் பழைய நிலை திரும்பிவிடும் என்றும் கிரவுடு ஸ்ட்ரைக் நிறுவனம் தெரிவித்துள்ளது.