வாட்ஸ்-அப் செயலியின் தாய் நிறுவனமான மெட்டா வருடாந்திர இரண்டாவது உரையாடல் மாநாட்டில், பல்வேறு புதிய அப்டேட்களை வெளியிட்டுள்ளது. 


இரண்டாவது வருடாந்திர மாநாடு:


மெட்டாவுக்குச் சொந்தமான வாட்ஸ்-அப் செயலி தொடர்பான இரண்டாவது வருடாந்திர உரையாடல் மாநாடு மும்பையில் புதன்கிழமை நடைபெற்றது. அப்போது, வாட்ஸ்அப்பில் தனிநபர்கள் மற்றும் வணிகங்களுக்கான புதிய அம்சங்களை மார்க் ஜுக்கர்பெர்க் வெளியிட்டார். வாட்ஸ்அப்பில் புதிதாக அறிவிக்கப்பட்ட அம்சங்களில்,  வணிக சுயவிவரங்களுக்கான ஃப்ளோஸ், பேமெண்ட்ஸ் மற்றும் மெட்டா வெரிஃபைடு ஆகிய மூன்று அம்சங்கள் அடங்கும்.


”ஃப்ளோஸ்”ஆப்ஷன்:


வாட்ஸ்-அப் ஃப்ளோ ஆப்ஷன் சாட் விண்டோவிலேயே வாடிக்கையாளர்களுக்கு பரந்த அளவிலான சேவைகளை வழங்க வணிகங்களை செயல்படுத்தும். உதாரணமாக, ஒரு வணிகம் முன்பதிவுச் சேவைகளை வழங்கினால், சாட்டிலிருந்து வெளியேறாமலேயே தங்களுடைய வாடிக்கையாளர்கள் தங்களின் ரயில் இருக்கைகளைத் தேர்வு செய்யவும், உணவை ஆர்டர் செய்யவும் அல்லது டிக்கெட்டுகளைப் பதிவு செய்யவும் அனுமதிக்கும். 
வாட்ஸ்அப் இந்த அம்சத்தை வாட்ஸ்அப் பிசினஸ் பிளாட்ஃபார்ம் மூலம் உலகளவில் பயனாளர்களுக்கு விரைவில் கிடைக்கச் செய்ய திட்டமிட்டுள்ளது.


பேமண்ட் வித் யுபிஐ & கார்ட்:


உரையாடலின்போதே நேரடியாக பொருட்களை வாங்கும் வகையிலான புதிய நடைமுறையையும் வாட்ஸ்-அப் செயலி கொண்டு வந்துள்ளது. இதன் மூலம்,  இந்தியாவில் உள்ள வாட்ஸ்அப் பயனர்கள் வாட்ஸ்அப் பிசினஸ் மூலம் பொருட்களை தங்கள் ஷாப்பிங் கார்ட்டில் சேர்த்து, ஆதரிக்கப்படும் UPI செயலிகள், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய முறைகளைப் பயன்படுத்தி பணம் செலுத்துவதைத் தொடர ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது.


கணக்குகளுக்கான பேட்ஜ்:


வாட்ஸ்அப் வணிக கணக்குகளின் நம்பகத்தன்மையைக் கண்டறிய உதவும் வகையில் மெட்டா சரிபார்க்கப்பட்ட அம்சங்களையும் WhatsApp கொண்டு வருகிறது. அதாவது வெரிஃபைட் செய்யப்பட்டதும், வணிகங்கள் ஒரு பேட்ஜைப் பெறும்- டிவிட்டரில் வழங்கப்படும் நீல நிற டிக் போன்றது. அது அவர்களின் சட்டபூர்வமான தன்மை, பயனர்களின் கணக்குகளுக்கான மேம்பட்ட ஆதரவு மற்றும் ஆள்மாறாட்டம் ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பை உறுதிப்படுத்தும். இந்த அம்சம் பிரீமியம் விருப்பங்களுடன், இணையத் தேடல்கள் மூலம் எளிதாகக் கண்டறியக்கூடிய கஸ்டமைஸ்ட் WhatsApp பக்கத்தை உருவாக்கும் திறனையும் வழங்குகிறது.  வாடிக்கையாளர் தொடர்புகளை நிர்வகிக்க பல பணியாளர்களுக்கான பல சாதன ஆதரவு ஆகியவை அடங்கும். வாட்ஸ்அப் பிசினஸ் பிளாட்ஃபார்மில் உள்ள வணிகங்களுக்கும் இந்த அம்சத்தை விரிவுபடுத்தும் நோக்கம் இருப்பதாகவும், விரைவில் சோதனை தொடங்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஜுக்கர்பெர்க் சொன்னது என்ன?


பதிவு செய்யப்பட்ட காணொலி வாயிலாக மாநாட்டில் உரையாற்றிய மெட்டா குழும உரிமையாளரான மார்க் ஜுக்கர்பெர்க், “வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தும் பல கண்டுபிடிப்புகளில் இந்தியா முன்னணியில் இருப்பதாக குறிப்பிட்டார். மக்களும் வணிகங்களும் செய்தி அனுப்புதலை எப்படிச் சிறந்த முறையில் ஏற்றுக்கொண்டீர்கள் என்பதன் அடிப்படையில் இந்தியா உலகையே வழிநடத்துகிறது" என்றும் குறிப்பிட்டார். வாட்ஸ்அப்பின் மிகப்பெரிய சந்தைகளில் இந்தியாவும் ஒன்றாகும். அதன்படி, இந்தியாவில் மட்டும் வாட்ஸ்-அப் செயலி  50 கோடிக்கும் அதிகமான பயனர்களை கொண்டுள்ளது. அடுத்தடுத்து பல்வேறு அப்டேட்களை வழங்கி வரும் வாட்ஸ்-அப் நிறுவனம், அண்மையில் கூட சேனல்ஸ் என்ற ஆப்ஷனை அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.